>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!
    தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நோக்கி பேருந்து விரைகிறது. காகங்களின் கரைதலில் கரைந்துக்கொண்டிருக்கிறது அதிகாலை இருட்டு. வாய்க்காலில் சிறுவர்கள் பாய்கிறார்கள். எங்கும் பசுமை. நெற்பயிர்கள் முளைவிட்டிருக்கின்றன. பெருகுமோ, கருகுமோ தெரியவில்லை. காவிரித் தாயை நம்பிக் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். படிப்படியாகக் குறைகிறது பசுமை. வயல்களில் முளைத்திருக்கின்றன திடீர் கட்டிடங்கள். குளங்கள் காய்ந்துக்கிடக்கின்றன. குளம் ஒன்றில் கழிவு நீர் பாய்கிறது. குப்பைகள் குவிந்துக்கிடக்கின்றன. பன்றிகள் மேய்கின்றன. பரபரப்பாக இயங்குகிறது பட்டுக்கோட்டை நகரம். இங்கிருந்து அரைமணி நேரப் பயணம். தென்னை மரங்கள் சூழ வரவேற்கிறது வேப்பங்குளம் பஞ்சாயத்து!
வாங்க மைடியர், வாங்க...” ஓடி வந்து கட்டியணைத்து வரவேற்கிறார் சிங்கதுரை. வேப்பங்குளம் பஞ்சாயத்துத் தலைவர். உடல்மொழியில் ஊற்றெடுக்கிறது உற்சாகம். துள்ளல் நடை. வழியில் பெண்மணி ஒருவர் வேனில் அரசுப் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்த காட்சி வித்தியாசமாக இருக்கிறது. குழந்தையாக மாறிய சிங்கதுரை, ‘ஹாய் மைடியர்ஸ்... ஹாய் மைடியர்ஸ்...’ என்று குழந்தைகளின் கன்னம் வருடி அனுப்புகிறார். “நம்ம கிராமப் பஞ்சாயத்தைப் பத்தி நான் சொல்ல மாட்டேன் மைடியர். நிறையோ, குறையோ மத்தவங்கதான் சொல்லணும். நீங்க பத்திரிகையாளர்தானே, உங்கக் கடமையை நீங்க செய்யுங்க. ஊருக்குள்ள நீங்களே விசாரிச்சி தெரிஞ்சிக்கோங்க... என்ன சொல்றாங்களோ அதை எழுதுங்க” என்கிறார்.
ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிறது வேப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. காலை மணியடிக்கிறது. உற்சாகமாக ஓடுகிறார்கள் குழந்தைகள். தனது குழந்தையை அழைத்து வந்திருந்தார் வடிவழகி. அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். “எனக்கு மூணு குழந்தைங்க. மூணு பேரும் தனியார் பள்ளியில்தான் படிச்சாங்க. இவளும் அங்கேதான் படிச்சா. சிங்கதுரை அய்யாதான் எங்கள்ட்ட பேசி அங்கிருந்து இவளை இந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார். கூடவே, குழந்தை பேருல அஞ்சாயிரம் ரூபாய் டெபாசிட் பண்ணியிருக்காரு...” என்கிறார். ஆச்சர்யமாக இருந்தது. பள்ளிக்குள் நுழைகிறோம்.
தனது குழந்தை ஹாசினியுடன் வடிவழகி
என்ன இல்லை எங்கள் பள்ளியில்?
“1944-ம் வருஷம் தொடங்குன பாரம்பரியம் மிக்க பள்ளிக்கூடம்ங்க இது. ஒருகாலத்துல இங்கிட்டு ஆயிரம் பேரு படிச்சாங்க. அப்ப எல்லாம் தனியார் பள்ளிகள் கெடையாது. எல்லாரும் இங்கிட்டுதான் படிக்கணும். சுத்து வட்டாரத்துலேயே பிரபலமாக இருந்துச்சு இந்தப் பள்ளிக்கூடம். 2000-களின் தொடக் கத்துலதான் பள்ளிக்கு ஆபத்து முளைச்சது. சுத்துவட்டாரத்துல அங்கிட்டும் இங்கிட்டுமா தனியார் பள்ளிகளைத் தொடங்குனாங்க.
ஊரெல்லாம் ‘இங்கிலீஷ் மீடியம்’னு போஸ்டர் ஒட்டுனாங்க. எங்க பள்ளியில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்குனது. இப்போ சுத்துவட்டாரத்துல சுமார் 20 தனியார் பள்ளிகள் இருக்குது. பத்து வருஷத்துக்கு முன்னாடி 600 பேரு படிச்ச இந்த பள்ளியில் கடந்த வருஷம் மாணவர் எண்ணிக்கை 40-க்கும் கீழே போயிருச்சு. நெருக்கியடிச்சு உட்கார்ந்த வகுப்பறைகள் எல்லாம் வெறிச்சோடியிருச்சு.
நாங்க பல வருஷமா அர்ப்பணிப்பு உணர்வோடு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்போம். செயல்வழி கற்றலில் ஆடிப் பாடி சொல்லித் தந்திருக்கோம். ஆனால், ஒவ்வொரு முறையும் பெற்றோர் டி.சி-யைக் கேட்டு வரும்போதெல்லாம் எங்களுக்கு அழுகை வந்திடும். ஏதோ சொந்தக் குழந்தையைப் பிடுங்கிட்டு போற மாதிரி இருக்கும். நாங்க பெற்றோர்கிட்ட கெஞ்சுவோம். வாதாடுவோம்.
ஆனா, ஆங்கில மோகத்துக்கு முன்னாடி எதுவும் எடுபடலை. இத்தனைக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் செயல்படுகிற பள்ளிக்கூடம்ங்க இது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் வீதம் ஆறு ஆசிரியர்கள் இருக்காங்க. அதுல நாலு பேரு முதுநிலை பட்டதாரிகள். சுத்துவட்டாரத்திலேயே பெரிய வளாகம் எங்க பள்ளிக்கூடம்தான்.
கடந்த மூணு வருஷமா அறிவியல் கண்காட்சியில் தொடர்ந்து ‘இன்ஸ்பையர்’ விருது வாங்கிட்டு வர்றோம். தரமான கட்டி டங்கள் இருக்கு. தனித்தனி வகுப்பறைகள் இருக்கு. நூலகம் இருக்குது. சத்துணவுக் கூடம் இருக்கு. அதுக்கு காஸ் இணைப்பு இருக்கு. விதவிதமாக மதிய உணவு கொடுக் கிறோம். பஞ்சாயத்து சார்பில் கழிப்பறை சுத்தமாக பராமரிக்கிறாங்க. ஓடியாட மைதானம் இருக்கு. என்னங்க எங்க பள்ளிக்கு குறைச்சல்? ஆனா, தீப்பெட்டியாட்டம் இருக்குற தனியார் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுறாங்க.
அரசுப் பள்ளியை சூழ்ந்த ஆபத்து!
இந்த சூழல்லதான் போன ஜூன் மாசம் திடீர் ஒரு தகவல் இடி மாதிரி வந்து இறங்குது. போதுமான எண்ணிக்கையில மாண வர்கள் இல்லாததால் எங்க பள்ளியை தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்க போறதா தகவல் வந்துச்சு. ஆசிரியர்களை யும் குறைச்சிடுவாங்களாம். என்ன செய்யற துன்னு தெரியாம தவிச்சு நின்னோம். இந்தத் தகவல் பஞ்சாயத்துத் தலைவர் சிங்கதுரைக் கிட்ட போனது. நேரடியா பள்ளிக்கூடத் துக்கே வந்தவர், எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கிட்டார். ‘கவலைப்படாதீங்க. பள்ளிக்கூடத்துக்கு நான் குழந்தைகளைக் கூட்டியாறேன். என்னை நம்புங்கன்னார். மறுநாளே தனியார் பள்ளிக்கூடத்து சீருடை யோட ரெண்டு குழந்தைகளைக் கூட்டியாந்தார். ரெண்டு மாசத்துல 10 பேரை சேர்த்துட்டார். தேவையான அளவு எண்ணிக்கையும் கூடுச்சு. தரம் குறைக்கறதுல இருந்து எங்க பள்ளிக் கூடம் தப்பிடுச்சு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.
உயர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை!
அரசுப் பள்ளிக்கு வரவழைக்க அப்படி என்ன செய்தார் சிங்கதுரை? கிராம சபைக் கூட்டத்தை கூட்டினார். மக்களை வரவழைத்தார். நமது குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எடுத்துச் சொன்னார். குழந்தைகள் தாய்மொழியில் கற்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். குழந்தைகள் சுமையில்லாமல் சுதந்திரமாக படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும், மக்கள் மனம் மாறவில்லை. இதனால் அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தார்.
அரசுப் பள்ளியில் தங்களது குழந்தையைச் சேர்ப்பவர்களுக்கு அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்றார். இரண்டே மாதங்களில் 10 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு இடம்பெயர்ந்தார்கள். சொன்னபடியே பணத்தை குழந்தைகள் பெயரில் முதலீடு செய்தார். படிப்படியாக அரசுப் பள்ளியில் குழந்தைகள் சேரத் தொடங்கினார்கள். பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்திருக்கிறது. தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்கும் ஆபத்தும் நீங்கியது.


வரும் கல்வியாண்டில் பள்ளிக் கூடத்தின் மாணவர்கள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்துவதாக உறுதியளித் திருக்கிறார் சிங்கதுரை. இவ்வாறு சேர்க் கப்படும் குழந்தைகளுக்கு சீருடை, காலணி, இலவசம். தனியார் பள்ளிகள் வேன்கள் மூலம் குழந்தைகளை அழைத்துச் செல்வதை கவனித்தவர், அரசுப் பள்ளிக்கும் வாடகை வேனை அமர்த்தியிருக் கிறார். வேனில் குழந்தைகளைப் பொறுப்புடன் ஏற்றி அழைத்துச் செல்ல பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காலையும் மாலையும் குழந்தைகளின் வீடு தேடி வருகிறது அரசுப் பள்ளி வேன். மகிழ்ச்சியோடு வருகிறார்கள் குழந்தைகள்