போக முடியாத தூரத்தில் 'வாங்க பழகலாம்' திட்டம்
எங்க ஊருக்கு வாங்க... பழகலாம்' திட்டத்தில், நீண்ட துார பள்ளிகளை இணைப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. செயல்வழி கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், இரு பள்ளி மாணவர்களை பழகவிட்டு, படிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஒரு கிராமத்து பள்ளி மற்றும் நகர பள்ளியை இணைத்து, ஒருவர் பள்ளிக்கு ஒருவர் சென்று, இரு பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும். இத்திட்டத்தில் சேர, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளும் ஆர்வமாக முன்வந்தன. ஆனால், 30 கி.மீ.,க்கு மேல் துாரத்தில் உள்ள, இரு பள்ளிகளை இணைத்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் உத்தரவிட்டதால், பல பள்ளிகள், திட்டத்தில் இருந்து விலகி வருகின்றன.
இதுகுறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறியதாவது: 'வாங்க பழகலாம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பள்ளியும், முதலில் இரு நாட்களும், பின், ஒரு நாள் வீதம் ஆறு முறையும், மற்ற பள்ளிகளுக்கு சென்று, அங்கு உள்ள மாணவ, மாணவியருடன், அந்த பகுதியை சுற்றி பார்க்க வேண்டும். இதனால், கிராமப்புற மாணவர்கள், நகரங்களையும்; நகர்ப்புற மாணவர்கள், கிராமங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
இதில், நீண்ட துாரத்தில் உள்ள பள்ளிகளை இணைப்பதால், போக்குவரத்து மற்றும் உணவுக்கு அதிக செலவாகும். நீண்ட துார பயணத்தால், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். குறைந்த துாரத்தில் உள்ள நகர பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்; அருகில் இல்லாவிட்டால் மட்டும், தொலைவில் உள்ள பள்ளிகளை இணைக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.