ஆசிரியர்களுக்கான ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி : நவ.12-ற்குள் விண்ணப்பிக்கலாம்!
ஆசிரியர்களின் திறமைகளைக் கண்டறியும் 'சென்டா' ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க
12.11.2017 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான கணித, அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகள்போல, ஆசிரியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அதை ஊக்குவிக்கும் விதமாக சென்டா நிறுவனம் (Centre for Teacher Accreditation) சார்பில் 'சென்டா' ஒலிம்பியாட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முதல், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
இதில், 14 வகை பாடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
பாடத்தில் ஆசிரியர்களின் திறன், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை, நுண்ணறிவு, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றை ஆராயும் வகையில் இத்தேர்வு இருக்கும்.
அப்ஜெக்டிவ் முறையிலான இத்தேர்வு 2 மணி நேரம் நடக்கும்.
2017-ம் ஆண்டுக்கான 'சென்டா' ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட நாடு முழுவதும் 28 நகரங்களில் டிசம்பர் 9-ம் தேதி நடக்க உள்ளது.
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாக தமிழில் நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், இணையதளத்தில் (www.tpo-india.org) நவம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ், தெலுங்கில் தேர்வு எழுதி வெற்றிபெறும் ஆசிரியர்கள் 2 பேருக்கு கையடக்க கணினி பரிசாக வழங்கப்படும்.
தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு டெல் நிறுவனம் சார்பில் கணினியும் பரிசாக வழங்கப்படும்.
'எடில் கிவ்' நிறுவனம் சார்பில், போட்டியில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.
நன்றி : தி இந்து