மாணவிகளின் தற்கொலை எண்ணத்தை போக்க புதிய முயற்சி
வேலூர் மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கிவிட்டது.
ஆனால் மாணவ–மாணவிகள் தற்கொலைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை கண்டாக வேண்டும் என்ற முழு உத்வேகத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான திட்டங்களை வகுப்பதில் இந்த ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:–
பள்ளி, கல்லூரி மாணவப் பருவத்தில் ஏதோ ஒரு வகையில் அவமானம் அடைந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருப்பதில்லை. பெற்றோர் திட்டுவதைக்கூட அவமானமாகக் கருதி பிள்ளைகள் தற்கொலை செய்வதுண்டு. மற்றவர்கள் முன்னால் கண்டிக்கப்படுவதைத்தான் பெரும்பாலான குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
தவறு செய்யும் குழந்தையை பெற்றோரோ அல்லது ஆசிரியர்களோ, தனியாக அழைத்து கண்டித்தால் அவர்களுக்கு அவமான உணர்ச்சி, தற்கொலை செய்யும் அளவுக்கு எழாது. மேலும் அவர்களை கண்டிக்கும் வார்த்தைகளிலும் ஆசிரியர், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் செய்த தவறுக்கு ஏற்ற வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி கண்டித்துவிட்டு, இறுதியில் அவர்களை சமாதானம் செய்து சிரித்து அனுப்பவேண்டும்.
நல்ல படிப்பும், அதிக மதிப்பெண்ணும் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலம் இல்லை. நன்றாகப் படித்தால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதெல்லாம் நிச்சயம் இல்லை. படிக்காத எத்தனையோ பேர் படித்தவர்களைவிட முன்னேறிச் சென்றுள்ளனர். படிக்காமலேயே உயர்ந்த இடத்துக்கு சென்றவர்களுக்கான உதாரணங்களும் போதும் போதும் என்ற அளவுக்கு உள்ளன.
ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதைக் கண்டறிந்து அந்த வழியில் அவர்களை நடத்தினாலே போதும். பள்ளிக்கூட தேர்வில் தோற்றுவிட்டால் உலகத்தில் வாழவே முடியாது என்பதெல்லாம் இல்லை. எனவே தோல்வி அடையும் குழந்தைகளை ஆசிரியர் மற்றும் பெற்றோரே தேற்றுவதுதான் முறை.
இவ்வாறு பள்ளி மாணவ–மாணவிகளை கையாளும் விதம் பற்றி சில புதிய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிக்க பள்ளிக் கல்வித் துறையிடம் பேசி வருகிறோம். குழந்தைகளுக்கு புரியும்படி படிப்பை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களை இலவச கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது.
பொதுவாக, குழந்தைகள் ஏதாவது தவறு செய்துவிட்டால், அதைக் கண்டித்து பெற்றோரிடம் சொல்வேன் என்று ஆசிரியர்கள் கூறுவது வழக்கம். இது அந்த மாணவ–மாணவிகளிடம் மிகுந்த பயத்தையும், மனபாரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. பெற்றோரிடமும் சொல்லி நிவாரணம் தேடும் மனநிலை அந்தக் குழந்தைகளுக்கு அப்போது இருக்காது.
எனவே இதற்கு நிவாரணம் பெறுவதற்காக ‘1098’ என்ற இலவச தொலைபேசி எண்ணை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இந்த எண்ணை பயன்படுத்தி மாணவ–மாணவிகள் தீர்வு பெறலாம். பெற்றோரோ அல்லது ஆசிரியரோ கண்டித்து அவமானப்படுத்திவிட்டால், தற்கொலையை நாடாமல் முதலில் இந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும். அதற்கு பதிலளிக்க 24 மணிநேரமும் ஆட்கள் இருப்பார்கள்.
படிப்பு, நட்பு என்று எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் சரி, எங்களிடம் சம்பந்தப்பட்ட குழந்தைகள் நேரடியாகச் சொல்லிவிட்டால், அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து, அவமான உணர்ச்சியை நீக்குவதுடன், தேவையான பாதுகாப்பும் அளிப்போம்.
எனவே நல்ல தீர்வு எங்களிடம் இருக்கும்போது, தற்கொலையை எந்த காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் நாடிவிடக் கூடாது. தற்கொலை என்பது தீர்வே அல்ல. அது தங்கள் குடும்பத்துக்கு காலங்காலமாக அவமானத்தை ஏற்படுத்தும் செயல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.