'கட்' அடிக்காதீங்க...: ஆசிரியர்களுக்கு கண்டிப்பு...
பள்ளிகளில், பாடம் எடுக்க வேண்டிய நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வகுப்பு நேரம் போக, மற்ற வேலை நேரங்களில், மாணவர்களின் தேர்வுத்தாள் திருத்துதல், வீட்டுப் பாடம் நோட்டுகளை திருத்துதல், புதிய பாடங்களுக்கான குறிப்புகள் எடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், அரசு திட்டங்கள் மற்றும் கல்வி தொடர்பான அலுவல் பணிகளை, தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலில் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், தங்களின் பாடவேளை போக, மற்ற நேரங்களில், வெளியே சொந்த வேலைகளை கவனிக்க போய் விடுகின்றனர். சிலர், ெவளியிடங்களில் ஊதியம் பெறும் வகையில், வேலை பார்க்கின்றனர். மற்ற சிலர், சங்க பணிகளை பார்க்கின்றனர்.
சில ஆசிரியர்கள், வகுப்பு நேரத்தில், பள்ளியில் இருக்காமல், இடமாறுதல் உள்ளிட்ட தங்களின் சொந்த தேவைகளுக்காக, கல்வித்துறை அலுவலகத்துக்கு வந்து, நேரத்தை வீணடிக்கின்றனர்.
இது குறித்து, பல தலைமை ஆசிரியர்கள், தங்களின் மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 'அரசு பள்ளி ஆசிரியர்கள், வகுப்புகளை, 'கட்' அடித்து, நேரத்தை வீணடிக்கக் கூடாது. மீறினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.