என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 1,070 பேராசிரியர்களுக்கு தடை
விடைத்தாள் திருத்தும்பணியில் மெத்தனமாக செயல்பட்டதால், என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தம் செய்ய 1,070 பேராசிரியர்களுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 518 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பருவத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த விடைத்தாள்களை பேராசிரியர்கள் சரியாக திருத்துவதில்லை என்றும், மெத்தனமாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது.குறிப்பாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த பருவத்தேர்வு விடைத்தாள்களை சரிவர திருத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா ஆகியோரிடம் சிலர் புகார் செய்தனர். இதற்கிடையே பல மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யக்கோரி விண்ணப்பித்து இருந்தனர்.
இதனையடுத்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் ஏற்கனவே மதிப்பீடு செய்த பேராசிரியர்களிடம் கொடுக்கப்படவில்லை. வேறு பேராசிரியர்களை கொண்டு இந்த விடைத்தாள்கள் திருத்தப்பட்டது. மறுமதிப்பீட்டில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் பழைய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் கிடைத்தது.முதலில் விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்கள் சரியாக திருத்தாததால் மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து போட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த பேராசிரியர்களுக்கு தண்டனை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.அதன்படி 1,070 பேராசிரியர்கள் 1 முதல் 3 வருடங்கள் வரை விடைத்தாள்களை திருத்தம் செய்ய தடை விதித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் உமா உத்தரவிட்டுள்ளார். இதில் சென்னை மண்டலத்தில் 680 பேர், திருச்சி மண்டலத்தில் 271 பேர், கோவை மண்டலத்தில் 119 பேர் அடங்குவர்.