ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்
ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசின் 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்துதல், பங்கேற்பு ஒய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொகுப்பூதியம் பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜாக்டோ-ஜியோ அ மைப்பு போராடி வருகிறது.
இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்றக் கிளை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்தது. ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது.
ஊதிய உயர்வு தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கையை பெறவும், ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை தரவும் அரசுக்கு உயர்நீதி மன்றம் காலக்கெடு நிர்ணயித்தது.
நீதிமன்றம் அறிவித்த காலக்கெடுவுக்குள் அரசு அந்த அறிக்கையை பெற்று பெயரளவுக்கு ஒரு ஊதிய உயர்வை அறிவித்து, கோரிக்கைகளை நிறைவேற்றாமலேயே ஜாக்டோ-ஜியோவை ஏமாற்றி வருகிறது. குறித்த காலத்துக்குள் ஊதிய உயர்வு அறிவிப்பை தந்து விட்டோம் எனக்கூறி நீதி மன்றத்தையும் அரசு ஏமாற்ற முயல்கிறது.
மேலும் நீதிமன்ற ஆணைக்கு முரணாக போராடிய ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்கள் மீது அரசு பொய் வழக்கு போட்டு பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கி வருகிறது. என்றாலும் நீதி மன்றம் தன் இறுதித் தீர்ப்பில் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு ஆணை பிறப்பிக்கும் என்றும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யும் என காத்திருக்கிறோம். இது பொய்த்துப் போனால் போராட்டம் ஓயாது. இவ்வாறு மீனாட்சி சுந்தரம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்