ஆசிரியர்களே இல்லாமல் இயங்கும் அரசு பள்ளி..
ஆசிரியர்களே இல்லாமல் பள்ளி இயங்குவதாக தேனி கலெக்டரிடம் மாணவ, மாணவியர் புகார் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் கோம்பைத்தொழு அருகே மஞ்சனூத்து கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது. ஈராசியர் பள்ளியான இப்பள்ளியில் மஞ்சனூத்து மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
ஈராசியர் பள்ளியான இப்பள்ளியில் கடந்த மாதம் வரை அனிதா என்ற இடைநிலை ஆசிரியை பணிபுரிந்து வந்தார்.-கணினிகல்வி- ஒரேயொரு ஆசிரியை மட்டுமே அனைத்து குழந்தைகளுக்கும் பாடம் நடத்தி வந்தநிலையில், கடந்த மாதம் 16ம் தேதி முதல் இருந்த ஒரு ஆசிரியையான அனிதாவை மாற்றுப்பணிக்காக உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு இடமாறுதல் செய்து மாவட்ட தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டது.
ஈராசியர் பள்ளியான மஞ்சனூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஒரு ஆசிரியர் இல்லாத நிலையில் பள்ளிக்கு மாணவ, மாணவியர் வந்தாலும், பாடம் ஏதும் நடக்காததால், வீணாக வீடு திரும்பி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நேற்று மஞ்சனூத்து கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து தங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இடைநின்ற பள்ளி மாணவ, மாணவியர்களை ஆண்டுதோறும் கணெக்கெடுக்க தனி நிதி ஒதுக்கி, இதற்காக உண்டு உறைவிடப்பள்ளி துவக்கி பாடம் நடத்த மத்திய அரசு திட்டம் உள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் அரசில், ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரை முதல்வராக ஆக்கிய ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மஞ்சனூத்து கிராமத்தில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் கல்விக்கு உத்தரவாதமாக ஆசிரியர்களை நியமிக்க கேட்டு கலெக்டர் அலுவலகம் வரை வந்தது ஆட்சியின் அவலத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசனிடம் கேட்டபோது,” இதுகுறித்து தற்போது என் கவனத்திற்கு வந்தது. உடனே, உத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மாற்றுப் பணிக்காக அனுப்பப்பட்ட ஆசிரியையின் இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மஞ்சனூத்து கிராம ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது” என்றார். ஈராசியர் பள்ளியில் ஓராசிரியை மட்டுமே நியமிக்கிறீர்களே, இன்னொரு ஆசிரியரை எப்போது நியமிக்க உள்ளீர்கள் என்றதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.