வாக்காளர் சேர்ப்பு: இன்று சிறப்பு முகாம்....
தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, இளம் வயது வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடக்கிறது.
தமிழகம் முழுவதும், 18 முதல், 21 வயதிற்குட்பட்டவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக, ஜூலை, 1 முதல், ஜூலை, 31 வரை, வாக்காளர் சேர்ப்பு நடக்கிறது. ஜூலை, 1 முதல், 8 வரை, 4,070 பேர்; 9ம் தேதி நடந்த சிறப்பு முகாமில், 30 ஆயிரத்து, 285 பேர்; ஆன்லைன் மூலம், 4,070 பேர்; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். தொடர்ந்து, வாக்காளர் சேர்ப்பு பணி நடந்து வருகிறது.
இன்று, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமிலும், 18 வயது முதல், 21 வயதிற்குட்பட்டவர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 'இந்த முகாமில், யார் விண்ணப்பம் கொடுத்தாலும், வாங்க வேண்டும்' என, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன; அதை தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''இளம் வயது வாக்காளர்களுக்காக, இம்முகாம் நடத்தப்படுகிறது. மற்றவர்கள் ஆன்லைன் மூலம், எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அடுத்து, அக்டோபரில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போதும் விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.