31ம் தேதி உங்களுக்கு ஒரு நியூஸ் வச்சிருக்கேன்.. மாணவர்களுக்கு செங்கோட்டையன் தகவல்!
திருவண்ணாமலை: மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்கும் வகையில் வரும் 31ஆம் தேதி புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக திருவண்ணாமலைக்கு இன்று வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு ஏற்படுத்தி தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில், வரும் 31ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் அறிவித்து வருகிறார். சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
வரும் 31 தேதி வெளியிடப்படவுள்ள தேர்வு குறித்த அறிவிப்பை மாணவர்களும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.