அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான்’’ மத்திய அரசு ஒப்புதல்!!!
அந்தரங்க உரிமை என்பது அரசியல் சட்டம் வரையறுத்த அடிப்படை உரிமைகளில்
சேருமா? இல்லையா? என்பது குறித்த பிரச்சினை, கடந்த 2015–ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு 9 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பப்பட்டது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த பிரச்சினையில், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அரசியல் சட்ட அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, மத்திய அரசின் நிலையை எடுத்துரைத்தார். அவர் கூறியதாவது:–
அந்தரங்க உரிமை என்பது அரசியல் சட்டம் வரையறுத்த அடிப்படை உரிமைதான். ஆனால், அது முழுமையானது அல்ல, அதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. அந்தரங்க உரிமையுடன் தொடர்புடைய சில அம்சங்களை அடிப்படை உரிமைகளாக கருத முடியாது.
உதாரணமாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்தரங்க உரிமையை ஒற்றை உரிமையாக கருத முடியாது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத 7 கோடி பேரின் அடிப்படை உரிமைகளை ‘அந்தரங்க உரிமை’ என்ற பெயரில் சிலர் மீறி வருகிறார்கள். வீடு இல்லாமல், நடைபாதையில் தூங்கும் ஏழைகள் அங்கேயே இறக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமை என்ன ஆனது? எனவே, அந்தரங்க உரிமையானது, ஏழைகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்காக பயன்படுத்தப்படக்கூடாது.
சுதந்திர இந்தியாவில், நெருக்கடி நிலை பிரகடனம் மிகவும் துரதிருஷ்டவசமான நிகழ்வு. அதுபோன்ற நிலைமை மீண்டும் வராது என்று நம்புகிறோம். நெருக்கடி நிலையின்போது, மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டது. முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் கூட கொடுமைகளை சந்தித்தனர். அதனால், நெருக்கடி நிலையை அமல்படுத்திய அப்போதைய ஆளுங்கட்சி, அதன்பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை.
இவ்வாறு கே.கே.வேணுகோபால் கூறினார்.
அவர் இன்றும் தனது வாதத்தை தொடருகிறார்.
இந்த விசாரணையின்போது, பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் புதுச்சேரி, கர்நாடகா, மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ‘அந்தரங்க உரிமையை அடிப்படை உரிமையாக கொள்ளலாம்’ என்று வாதிட்டார்