நாடு முழுவதும் ஒரே ‘நீட்’ கேள்வித்தாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்!!!
நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை
சேர்ப்பதற்காக, ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு கடந்த மே 7–ந்தேதி நடத்தப்பட்டது. இந்தி, ஆங்கிலம் மற்றும் 10 மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் இருந்தன. தேர்வு எழுத வந்த மாணவ–மாணவிகளிடம் நிறைய கெடுபிடிகள் காட்டப்பட்டதால், ஏற்கனவே இந்த தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தி, ஆங்கிலம் கேள்வித்தாளை விட மாநில மொழி கேள்வித்தாள்கள் கடினமாக இருந்ததாக, மாநில மொழிகளில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலரும், பாட நிபுணர்களும் விமர்சித்தனர்.
இதுதொடர்பாக மாணவர்கள் சிலர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை நேரில் சந்தித்து முறையிட்டனர். இந்த சர்ச்சை குறித்து, ‘நீட்’ தேர்வை நடத்திய மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.யிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டது. இதற்கிடையே நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை தயாரித்து நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே ‘நீட்’ கேள்வித்தாள் முறை கொண்டுவரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்காள கல்வித்துறை அமைச்சர் தரப்பிலும் இந்தி மற்றும் ஆங்கில மொழி கேள்வித்தாள்களைவிட பிரந்திய மொழி கேள்வித்தாள்கள் மிகவும் கடினமாக இருந்தது என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கேள்வி எழுப்பிய போது, இனி பிராந்திய மொழி கேள்வித்தாள்கள் ஆங்கில மொழி கேள்வித்தாள்களின் மொழிபெயர்ப்பாக இருக்கும் என்றார். இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் ஒரே மாதிரியான கேள்வித்தாளே இடம்பெற உள்ளது. பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இவ்விவகாரம் தொடர்பாக நாங்கள் அழைப்பு விடுக்கவேண்டியது உள்ளது. இவ்விவகாரம் ஆலோசனை மட்டத்தில் இப்போது உள்ளது, என கூறிஉள்ளார்.