பாடத்தோடு குழந்தைகளுக்கு விளையாட்டு:உடுமலை அருகே அசத்தும் அரசுப்பள்ளி
காலையில் படிப்பு; மாலை முழுதும் விளையாட்டு என்ற பாரதியின் கூற்றை, பின்பற்றி, குழந்தைகளுக்கு பாடத்தோடு, உடல்நலத்தை மேம்படுத்தும் விளையாட்டுகளையும் பயிற்சியளித்து வருகிறது குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
உடுமலை பெதப்பம்பட்டி ரோட்டிலுள்ள குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 51 குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு, செயல்வழிக்கற்றல், எளிமையான கற்றல் என கற்றலுக்கான வழிமுறைகள் பலவகைகளில் மாற்றப்பட்டுள்ளன.
ஆனால், ஓடி ஆடி விளையாட இடவசதியில்லாதது, சில பள்ளிகளில் வகுப்பறையே பற்றாக்குறையாக இருப்பது போன்ற காரணங்களால், பல பள்ளிகளில் வகுப்பறை பாடம் மட்டுமே என்ற நிலை உள்ளது.இதனால், குழந்தைகளின் விளையாட்டுத்திறன் முடங்குவதோடு, அவர்களின் உடல்நிலையும் புத்துணர்ச்சி பெறுவதில்லை.
இதனால், விளையாட்டின் மீது ஆர்வம் இருப்பினும், அந்த குழந்தை பருவத்தில் அதற்கான வாய்ப்பில்லாமல் போவதால், அடுத்தடுத்து வரும் நடுநிலை மற்றும் உயர்நிலைகளில் அக்குழந்தைகளுக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் குறைகிறது. இத்தகைய பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாய் துவக்க நிலையிலிருந்தே குழந்தைகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தி வருகிறது குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் மட்டுமே இப்பள்ளியில் உள்ளனர்.
இருப்பினும், இங்குள்ள குழந்தைகளை பன்முகத் தன்மை கொண்டவர்களாக விளையாட்டு, கலை, என அனைத்திலும் மேம்படுத்தி வருகின்றனர். அழகாய் தலையசைத்து ஆங்கில உச்சரித்து பாடம் படிக்கின்றனர் அக்குழந்தைகள். நாடகம் நடிப்பது, கற்பனை கதாபாத்திரங்களாக மாறி கதை சொல்வது என அனைத்துமே பாடவேளையின் ஒரு பகுதியாக பின்பற்றுகின்றனர்.
ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை குறைவு என காரணங்களை கூறி பல பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த தயங்குகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியரோடு சேர்த்து இரண்டே ஆசிரியர்கள் இருந்தாலும், ஆங்கில வழியின் மீது பெற்றோருக்கு ஆர்வம் இருப்பதால், கூடுதல் முயற்சி எடுத்து, தற்போது மூன்றாம் வகுப்பு வரை ஆங்கில வழி முறையையும் நடத்துகின்றனர்.
புத்துணர்ச்சியோடு பள்ளிக்குள் நுழையும் குழந்தைகளை காலையில் படிப்பு, மாலையில் விளையாட்டு என உற்சாகத்தோடு அனுப்புகின்றனர். கேரம், செஸ் விளையாடுவது, இடைவேளைகளில் யோகா, மாலை நேரத்தில், கால்பந்து, கையுந்துபந்து, என உடலையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சியோடு இருக்க பயிற்சியளிக்கின்றனர் ஆசிரியர்கள். ஆரம்பக்கல்வியோடு, அடிப்படை விளையாட்டு பயிற்சியும் அவசியம் என்பதை வெளிப்படுத்தி வருகிறது, குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.