ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி..
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே யோகா வகுப்பு நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் மன அழுத்தம் இன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் மாணவ-மாணவிகளுக்கு நன்றாக கல்வி கற்பிக்க முடியும். இதை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
யோகா பயிற்சி அளிப்பதால் ஆசிரியர்களுக்கு மன நலமும், உடல் நலமும் நன்றாக இருக்கும். இதற்காக யோகாவில் நிபுணத்துவம் பெற்ற சமுதாய சேவை மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 67 கல்வி மாவட்டங்களிலும் தலா 85 ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 695 ஆசிரியர்கள் பயன் அடைவார்கள். இவர்கள் யோகா பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் ஆக இருக்கவேண்டும். மேலும் விருப்பம் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், சாரண ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை ஆசிரியர்கள், தேசிய பசுமைப்படை ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். பயிற்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை 2 நாட்கள் நடைபெறும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி நாட்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த (ஆகஸ்டு) மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் யோகா பயிற்சி முடிவடையும்.
இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார்.