செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணி: ரேங்க் முறை ஒழிப்பு முதல் ஒளிவுமறைவற்ற பணிமாறுதல் கலந்தாய்வு வரை - கலக்கும் பள்ளிக்கல்வித்துறை
லஞ்சத்தை ஒழிக்க CEO, DEEO அலுவலகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை சீருடையில்லாமல் பணியில் அமர்த்தியிருக்கிறாராம் அமைச்சர் செங்கோட்டையன்"
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே இருக்கும் குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ளது தென்னை மரங்கள் சூழ்ந்த அந்த பிரமாண்ட வீடு. சனி, ஞாயிறு என்றாலே காலை ஏழு மணியில் இருந்தே அந்த வீட்டில் ஜன நடமாட்டம் தொடங்குகிறது. வெயில் ஏற ஏற அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் கூட்டமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அதுதான் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் வீடு.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டவுடன் அவரது அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றவர் செங்கோட்டையன். கோபிச் செட்டிப்பாளையம் தொகுதியில் இதுவரை எட்டு முறை வெற்றி பெற்றவர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் சென்னையில் தனது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வெள்ளி இரவு புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை கோபி வீட்டுக்கு வந்துவிடுகிறார். அவர் எழுந்து வாக்கிங் வரும்போதே மக்கள் கையில் மனுக்களோடும், கோரிக்கைகளோடும் வீடு தேடி வந்துவிடுகின்றனர்.
கைலி பனியனோடு காட்சியளித்தபடியே மனுக்களை வாங்கி தனது உதவியாளர்களிடம் கொடுக்கும் செங்கோட்டையன், எந்தெந்த துறைக்கு மனுக்கள் வந்திருக்கிறது என்பதையும் துறை வாரியாக பிரித்து அந்தந்த துறைகளுக்குத் தனது பரிந்துரையோடு அனுப்பி வைக்கிறார். இப்படியே சுமார் பதினோரு மணி வரை மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்ளும் செங்கோட்டையன், மேலும் அந்தந்த வார நாள்களில் நடந்த சுப, துக்க நிகழ்ச்சிகளின் பட்டியலோடு கிராமம் கிராமமாகப் புறப்பட்டு விடுகிறார்.
“தமிழக அமைச்சர்களிலேயே ஓர் அமைச்சரின் வீட்டில் இத்தனை ஆயிரம் பேர் வாராவாரம் கூடுகிறார்கள் என்றால் அது செங்கோட்டையன் வீட்டில்தான்” என்று அதிமுக-வினரே கூறுகிறார்கள்.
மேலும், “அமைச்சர் ரொம்ப சீனியர். இடையில் புறக்கணிக்கப்பட்டு இருந்தார். அப்பக்கூட அவர் வீட்டுக்கு ஜனங்க வந்துகிட்டுதான் இருப்பாங்க. இப்பவும் வர்றாங்க. மக்கள் அவரை எப்போதும் ஒரே மாதிரிதான் பாக்குறாங்க” என்கிறார்கள் லோக்கல் அதிமுக நிர்வாகிகள்.
கோபியில் இப்படி என்றால்... சென்னையிலும் அவரது பள்ளிக்கல்வித்துறையிலும்கூட செங்கோட்டையனுக்கு இன்னும் அதே முக்கியத்துவம் இருக்கிறது.
“பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சர் செங்கோட்டையன் என்றதுமே இவர் அங்கே என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எல்லாருக்கும் எழுந்தது. மேலும் கடந்த ஆறு வருடங்களாக பள்ளிக்கல்வித்துறை ராசியில்லாத துறையாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது அமைச்சர் செங்கோட்டையனும், துறையின் செயலாளர் உதயசந்திரனும் சேர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மிக முக்கியமான ஆக்கபூர்வமான மாற்றங்களை செய்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்துகே ராசியான துறையாக அதை மாற்றிவிட்டார்கள்.
உதயசந்திரன் மிகவும் நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர். அவரை அழைத்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நான் அமைச்சர் ஆவேன்னு எல்லாம் எதிர்பார்க்கலை சார். என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை முன்னேற்ற என்ன நடவடிக்கை எடுக்கணுமோ... அதைச் சொல்லுங்க. நல்லதை செய்வோம்’என்று கூறியிருக்கிறார்.
அதன் விளைவாகத்தான்... தேர்வு முடிவுகளில் ரேங்க் ஒழிப்பு, பதினோராம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, சீருடைகள் மாற்றம் என்று பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் அணி வகுக்கின்றன.
தர வரிசை முறையை ஒழித்ததைத் திரும்பப் பெற வேண்டும் என்று கொங்கு மண்டலத்தை சேர்ந்த கல்வி நிறுவன அதிபர்கள் ‘உரிமையோடு’ அமைச்சரை கோபி வீட்டிலும் கோட்டையிலும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால், அந்த மனுவை வாங்கி அவர்களுக்கு எதிரிலேயே கிழித்துப் போட்டுவிட்டாராம்.
மேலும், ஆசிரியர் இட மாறுதல்கள் இந்த வருடம் எந்த குழப்பமும் இல்லாமல் நேர்மையாக நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் செங்கோட்டையன் – உதயசந்திரன் கூட்டணிதான்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்டக்கல்வி அலுவலகம், முதன்மைக்கல்வி அலுவலகங்களில் எங்கும் எதற்கும் லஞ்சம் பரிமாற்றப்படக் கூடாது என்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை சீருடையில்லாமல் பணியில் அமர்த்தியிருக்கிறாராம் செங்கோட்டையன்.
பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
➤கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது.
➤அடுத்து கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புக்கு பொது தேர்வு
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடப்பட்டது.
➤தேசிய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
➤மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறை ரத்து.
➤ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்கப்படுகிறது.
➤ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உட்பட 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும்
➤ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு,இணையம் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
➤நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அடுத்த ஆண்டிலிருந்து பயிற்சி அளிக்க ஆலோசனை.
➤ரூ 26,913 கோடி பள்ளிக்கல்விக்கு ஒதுக்கீடு.
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்களை விளம்பரப்படுத்தக் கூடாது.
➤பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்பட உள்ளது.
➤சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கத் திட்டம்.
➤கட்டாய கல்வி இடஒதுக்கீட்டில் 40 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று +2 பொதுத் தேர்வு முறையில் பல மாற்றம் கொண்டுவரப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
➤மாணவர்களின் மன அழுத்தம் குறையும் வகையில் அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் 200-ல் இருந்து 100ஆக குறைப்பு.
➤3 மணியில் இருந்து 2.30 மணியாக தேர்வு நேரமும் குறைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
➤வகுப்புக்கு ஏற்றவாறு சீருடைகள் மாற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் பள்ளிகள் தொடங்கும் முன்பே அரசாணையாக வெளியிடப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணியால் மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மை தொடரட்டும்.