பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் நேரடியாக சேர்க்கும் திட்டம் அமலாக்கம்
உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தக வினியோகம் துவங்கியுள்ளது.உடுமலை மற்றும் குடிமங்கலத்தில் 179 துவக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 34 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலும், கல்வித்துறை அலுவலகங்களிலிருந்து, பள்ளி நிர்வாகத்தினர் புத்தகங்களை எடுத்து வந்தனர். நடப்பு கல்வியாண்டு முதல், அரசின் மூலமே,அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவி பொருட்கள் நேரடியாக கொண்டு சேர்க்கப்படும் என அறிவித்தது. உடுமலை மற்றும் குடிங்கலம் வட்டாரங்களில், புத்தகங்கள் இருப்பு வைக்கப்படும் மையப்பள்ளிகளுக்கு கல்வித்துறையின் மூலம் புத்தகங்கள் வழங்கப்பட்டன. தற்போது, அங்கிருந்து, வரிசைப்படி, வாகனம் மூலம், புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக கொண்டு சேர்க்கும் பணிகள் துவங்கியுள்ளன. அதேபோல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும், முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வரப்படுகின்றன.