அரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்!
போளூர் : ஐஏஎஸ் என்று சொல்லப்படும் இந்திய குடிமைப் பணியில் அரசுப் பள்ளியில் படித்த போளூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி
பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்வு எழுதிய ஆயிரத்து 99 பேரின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என்று இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
Thiruvannamalai government school student Vijayalakshmi cleared her IAS exams
இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று டிசம்பர் மாதம் மெயின் தேர்வை எழுதினர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், விஜயலட்சுமி பாத்திரக்கடையின் உரிமையாளருமானவர் ஜெயகுமார். இவரின் மகள் விஜயலட்சுமியும் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடக்கக்கல்வியை அங்குள்ள நர்சரிப் பள்ளியொன்றில் பயின்ற விஜயலட்சுமி, மேல்நிலைக்கல்வியை திருவண்ணாமலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயின்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்றாலும் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அனைவரிடமும் இருந்து விஜயலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன