புதிய கல்வி ஆண்டு இன்று துவக்கம் : ஆசிரியர்களுக்கு விடுமுறை முடிந்தது.....
கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பணிகள், இன்று துவங்குகின்றன. வரும், 7ம் தேதிக்குள், முன்னேற்பாட்டு பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
இன்று, அனைத்து பள்ளிகளும் திறப்பதாக முடிவாகியிருந்தது. ஆனால், கோடை வெயில் காரணமாக, பள்ளிகள் திறப்பு, ஜூன், 7க்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை முடிந்து, இன்று புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் துவங்குகின்றன. விடுமுறையில் சென்ற ஆசிரியர்கள், ஜூன், 7 வரை காத்திருக்காமல், இன்று முதல் வர, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். பல மாவட்டங்களில், ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களிடம் இருந்து உத்தரவு கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது.
ஆனால், கோவை மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் இன்றே பணிக்கு வர வேண்டும் என, கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கவுன்சிலிங் மூலம் இட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், தமிழகம் முழுவதும், இன்றே பள்ளிகளில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சென்னையிலும் அரசு பள்ளி ஆசிரியர்கள், இன்று அல்லது நாளைக் குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஜூன், 7ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பள்ளியை தயார் செய்தல், உள்கட்டமைப்பு வசதிகளை சரிபார்த்தல், இலவச நோட்டு, புத்தகங்களை, வகுப்பு வாரியாக தயார் செய்து வைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.