‘‘நடிகர், நடிகைகளைச் சந்திக்கிறார், எங்களுக்குப் பதிலளிக்க பிரதமர் மோடிக்கு நேரம் இல்லையா?’’ - தமிழ்நாட்டு அரசு பள்ளி மாணவியின் கடிதம்....
'பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்கிறார். நடிகர், நடிகைகளைச் சந்திக்கிறார். ஆனால், எங்களுக்குப் பதிலளிக்க மட்டும் நேரம் இல்லையா?' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரிடம் பேசினோம்...
வளமான தேசத்துக்கு கல்வியே அடிப்படை. ஆனால், கல்வி கற்க தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் தமிழகத்தில் இல்லை. அந்த வசதிகளைச் செய்துதர வேண்டி, புதுக்கோட்டை கீரனூர் அரசுப் பள்ளி மாணவியான சரஸ்வதி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அரசு பள்ளி மாணவி‘‘நான் கீரனூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புக்குப் போகப்போகிறேன். எங்க ஸ்கூல் ரொம்ப பழமையானது. பொன் விழா கொண்டாடிய பள்ளி. இங்கே 1,800 மாணவிகள் படிக்கிறோம். நாற்பது டீச்சர் இருக்காங்க. சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஒரே பெண்கள் பள்ளி இதுதான்’’ என தன் பள்ளியின் பெருமைகளைச் சொன்ன சரஸ்வதி, தொடர்ந்து தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘‘பக்கத்துல இருக்குற புளியங்குளம், நஞ்சூர், சவேரியார் பட்டிணம் என கிட்டத்தட்ட ஐம்பது குக்கிராமங்களில் இருக்கும் பிள்ளைங்க எல்லாம் ரொம்ப தூரம் நடந்துவந்தும், பஸ்ல வந்தும் இங்க படிக்கிறாங்க. போதுமான வகுப்பறைகள் இல்லாததால ஒவ்வொரு வகுப்பிலும் அளவுக்கு அதிகமான பேர் இருக்கோம். ஒரே பென்ச்ல இடிச்சுப் பிடிச்சு எட்டு பேர் உட்கார்ந்திருக்கோம். இவ்வளவு பொம்பளைப் பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ல மூணு டாய்லெட்தான் இருக்கு. எங்க வீடு பக்கத்துல இருக்கிறதால, ஃப்ரண்ட்ஸை எங்க வீட்டுக்குத்தான் பாத்ரூமுக்கு கூட்டிட்டுப் போறேன். யூரின் வந்திரும்னு பலரும் தண்ணீக்கூட குடிக்கறதில்லே. இதனால் நிறைய பேருக்கு யூரினரி இன்பெக்ஷன், வயித்து வலினு ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கு. இருக்கிற பாத்ரூமுக்கும் தண்ணீர் கிடையாது. அந்தப் பக்கமே போக முடியாத அளவுக்கு நாறும். இதெல்லாம் எங்க மனசை ரொம்ப பாதிக்குது’’ என்கிறார் வருத்தமும் கோபமும் கலந்த குரலில்.
பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதும் அளவுக்குத் தூண்டிய நிகழ்வு பற்றி பேச ஆரம்பித்த சரஸ்வதி, ‘‘அகில இந்திய வானொலியில ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒலிபரப்பு பண்ணினாங்க. எங்க வீட்ல வானொலி கேட்கும் பழக்கம் இருக்கு. 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் தமிழாக்கத்தை, ஞாயிற்றுக்கிழமை நைட் எட்டு மணிக்கு ஒலிபரப்புவாங்க. நான் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியைக் கேட்பேன். அதுல தூய்மை இந்தியா திட்டம் பற்றி நிறைய பேசுவார். 'உங்களுக்கு என்ன பிரச்னைன்னாலும் இந்த முகவரிக்கு லெட்டர் போடுங்க'னு சொன்னார். நான் அந்த முகவரியை குறிச்சுக்கிட்டேன். கொஞ்ச நாள் முன்னாடி, ஒன்பதாவது படிச்சுட்டு இருந்தப்போ, எங்க ஸ்கூல்ல இருக்கிற பிரச்னை பத்தி கடிதம் எழுதினேன். கொஞ்ச நாள்ல பிரதமர் அலுவலகத்துல இருந்து பதில் வந்துச்சு. தமிழக மாநில செயலாளர், மாவட்ட கலெக்டருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவு போட்டிருந்தார்’’ என்றவர் அதன்பின் நடந்த விவரங்களைத் தொடர்ந்தார்.
‘‘எங்க ஸ்கூலுக்குப் பக்கத்துல இருக்குற பொதுப்பணித் துறை அலுவலகம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. யாரும் இப்ப பயன்படுத்தறதில்லை. அந்த இடத்தை எங்க ஸ்கூலுக்கு தர்றதா சொன்னாங்க. ஆனால், அதுக்கான எந்த முயற்சியும் நடக்கலை. இதை வலியுறுத்தி இரண்டாவது முறையா பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். அதுக்கு எந்தப் பதிலும் வரல. தமிழக செயலாளருக்கு ஃபார்வர்டு பண்ணினதோடு அவங்க வேலை முடிஞ்சுட்டதா நினைச்சுட்டாங்க போல. 'ஸ்வச் பாரத்'னு பேசறதால மட்டும் எதுவும் நடந்திடாது. செயல்படுத்தும் விதத்துலதான் நிலைமை சரியாகும். எங்கள் பிரச்னைக்கு பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுக்கணும். இது ஒரு ஸ்கூலின் பிரச்னை மட்டுமில்லெ. நம் நாட்டுப் பெண்களின் பிரச்னை. போதுமான கழிவறை இல்லாததால மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்படும். இது, எதிர்காலத்தில் நாங்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு எங்களுக்குப் பல பிரச்னைகளை கொடுக்கும். இதுக்கு பிறகும் நடவடிக்கை எடுக்கலைன்னா, ஸ்கூல் திறந்ததும் பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து போராடப்போறோம்’’ என்கிற சரஸ்வதியின் குரலில் உறுதி வெளிப்பட்டது.