கரூர் வந்தது நவீன அறிவியல் கண்காட்சி ரயில்: மாணவ, மாணவிகள் ஆர்வம்.....
கரூர் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்த நவீன அறிவியல் கண்காட்சி ரயிலை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்முடன் கண்டு ரசித்தனர்.
கரூர் ரயில் நிலையத்தில் அறிவியல் கண்காட்சி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை வந்தது. இந்த ரயிலில் உள்ள நவீன அறிவியல் கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில் இந்த ரயில் 16 பெட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு 2007 அக்டோபர் திங்கள் புதுதில்லியில் தொடங்கப்பட்டு சுமார் 1,46,000 கி.மீ பயணம் செய்து 473 இடங்களில் 1,650 கண்காட்சி நாட்கள் நடத்தப்பட்டு சுமார் 1.6 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.
நாட்டு மக்களிடையே அறிவியல் அறிவை பரப்பி உலகில் மிகப் பெரிய, நீண்டகால மற்றும் அதிகமானோர் பார்வையிட்ட நடமாடும் அறிவியல் கண்காட்சி என்ற பெருமயைப் பெற்று லிம்கா சாதனை புத்தகத்தில் 12 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி ரயிலில் பருவநிலை மாற்றத்தால் மனிதனுக்கு ஏற்படும் விளைவுகள்,வெப்பநிலை உயரக் காரணங்கள்,பருவநிலை வேறுபாடுகள்,குடிநீர் வளம்,விவசாயம்,வனம்,சுகாதாரம்,சுற்றுச்சூழல் பிரச்னை, உணவு உற்பத்தி, பருவநிலை மாற்றம், பேரிடர், வெள்ளப்பெருக்கு, கடல் மட்டம் உயர்தல் என பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து அறிவியல் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பாதிப்புகளை சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் குறிப்பாக மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நேக்கமாக கொண்டு இந்த அறிவியல் கண்காட்சி ரயில் பயணம் மேற்கொள்கிறது என்றார்.
இந்த கண்காட்சி வரும் 22-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இதைப் பொது மக்கள், மாணவ,மாணவிகள் கட்டணமில்லாமல் பார்த்து பயன்பெற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் சந்திரபால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணன், வருவாய்க் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், வட்டாட்சியர் சக்திவேல், கரூர் ரயில் நிலைய மேலாளர் சுரேந்தரபாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.