முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேடு: தமிழக அரசு ஒப்புதல்!
தமிழகம் முழுவதும் மருத்துமனைகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், இதனை கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தாலும், அவை எதுவும் செயல்பாட்டிலில்லையென்றும் ரமேஷ் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும் அரசின் உத்தரவின்படி நடத்த வேண்டிய மருத்துவ முகாம்கள் கூட சரியாக நடத்தபடுவது இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
தமிழகம் முழுவதும் மருத்துமனைகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றன. இது தொடர்பாக நடந்த விசாரணையில் 16 மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 117 மருத்துவமனைகளுக்கு அவற்றின் செயல்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஏற்கனவே கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.