ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை: புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு)சேர 31 முதல் ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,''2017-2018-ம் கல்வியாண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு) சேர்வதற்கான ஒற்றைச்சாளர முறையிலான மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணங்கள் மே 31 காலை 10 மணி முதல் ஜூன் 21 வரை www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்த இணையதளத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்களது விவரங்களை மாணவர்கள் பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்த பற்று அட்டை, கடன் அட்டை, இணைய வங்கி சேவை ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம். பொதுப்பிரிவு, பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ. 500-ம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்தபின்னர், சேவ் என்ற பொத்தானை அழுத்த வேண்டும். பின்னர் பணம் செலுத்தும் தளம் தொன்றும். அதில் கட்டணம் செலுத்தலாம். மாணவர்கள் அளிக்கும் விவரங்கள் கலந்தாய்வின்போது சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே சேர்க்கை உறுதி செய்யப்படும்.
விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள், தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த விவரங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பங்கள் பதிவேற்ற கடைசி நாள், சிறப்பு இட ஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்'' என்று அந்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.