பாடத்திட்ட மாற்றத்திற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும்
தமிழக பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக இன்னும் 2 நாட்களில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், ஒரு பாடத்திற்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் பொதுவான சராசரி மதிப்பெண் கணக்கிடப்பட்டு ஒரே சான்றிதழ் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் இந்திய அரசியல் சாசனத்தில் உள்ளது போல இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக மாணவர்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் பழனிச்சாமியின் ஒப்புதலோடு ஜூன் 6 அன்று வெளியாகவுள்ள கல்வி சார்ந்த அறிவிப்புகளைப் பார்த்து நாடே வியப்படையும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.