கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் சிரமம்
கோவை: பொதுத்தேர்வுக்கு முன்பு, முழு பாடத்திட்டத்தில் இருந்தும், அடுத்தடுத்து தேர்வுகள் நடத்துவதால், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த,
நேரமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
நடப்பு கல்வியாண்டு முதல், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பருவத்தேர்வுகளுக்கு பதிலாக, ’முன் -- அரையாண்டு தேர்வு’ நடத்தப்படும் என,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வு, வரும் 14ம் தேதி துவங்கி, 25ல் நிறைவடைகிறது. இதற்கு, முழு பாடத்திட்டத்தில் இருந்தும், கேள்விகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, டிச., 9ம் தேதி மற்றும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிசம்பர் 7ம் தேதி துவங்கி, 23ல் நிறைவடைகிறது.
இத்தேர்வுக்கும், முழு பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் இடம்பெறும். இதற்கு பின், அடுத்தடுத்த பத்து நாட்கள் இடைவெளியில், திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,’முன் - அரையாண்டு தேர்வில், அனைத்து பகுதிகளிலும் கேள்விகள் இடம்பெறுவதற்கு பதிலாக, பருவத்தேர்வு போல் நடத்தலாம். காலாண்டு தேர்வுக்கு பின் நடத்திய பாடங்கள் முழுமையாக தயார்படுத்த, பருவத்தேர்வு உதவிபுரியும்.
முன் அரையாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் என, ஐந்து முறை, முழு புத்தகத்தில் இருந்தும் கேள்விகள் இடம்பெற்றால், சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி பெற உதவியாக இருக்கும். ஆனால், பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த முடியாது.
’பொதுத்தேர்வு முடிவுகளில், தோல்வி சதவீதம் வைத்து தான், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மதிப்பிடப்படுகிறது. 100 சதவீத தேர்ச்சி இலக்கு அடைய, அடுத்தடுத்து தேர்வுகள் நடத்துவதை விட, படிக்க நேரம் அளிப்பது அவசியம்’ என்றனர்.