அடைவுத் தேர்வு வினாத் தாள் நகல் - அரசே இலவசமாக வழங்கக் கோரிக்கை.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அடைவுத் தேர்வு வினாத் தாள்களை நகலெடுக்க பல லட்சம் நிதி செலவாகும் என்பதால், அரசே இலவசமாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் செ. பால்ராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு செய்வதற்காக பயிற்சித் தாள் மூலம் அடைவுத் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இத்தேர்வுகான வினாத் தாள்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வினாத் தாள்களை அந்தந்தப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நகல் (ஜெராக்ஸ்) எடுத்து தேர்வு நடத்த வேண்டும் என அந்தந்த வட்டார அதிகாரிகள் மூலம் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாத் தாள் ஆரம்பப் பள்ளிகளுக்கு 39 பக்கங்களும், நடுநிலைப் பள்ளிகளுக்கு 69 பக்கங்களும் உள்ளன. இந்த 69 பக்கங்களை நகல் எடுக்க ரூ.69 செலவாகும். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 1492 ஆரம்பப் பள்ளிகள், 419 நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 2.98 லட்சம் மாணவர்களுக்குத் தேவையான 2.98 லட்சம் நகல் பிரதிகள் எடுக்க வேண்டும். இதன் மொத்தச் செலவு ரூ. 2.05 கோடி ஆகும். மாநிலம் முழுவதுமுள்ள 55,667 பள்ளிகளில் பயிலும் 1.36 கோடி மாணவர்களுக்கு வினாத் தாள் நகல் எடுக்க ரூ.93 கோடி செலவாக வாய்ப்புள்ளது. வினாத் தாள் நகல் எடுக்கும் செலவை அந்தந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களே தங்களது சொந்தச் செலவில் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க நிதியாக ரூ.5000 வழங்கப்படுகிறது. இதிலிருந்து ரூ.200 மட்டுமே நகல் எடுக்கும் செலவுக்கு பயன்படுத்த முடியும். வினாக்களை கரும்பலகையில் எழுதி தேர்வு நடத்துவதில் ஆசிரியர்களுக்கு நடைமுறையில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இத்தேர்வு முறை வரவேற்கக்கூடியது. அதேநேரத்தில் தேர்வு நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளன. ஆகவே, அடைவுத் தேர்வுக்கான வினாத் தாள்களை அரசே இலவசமாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.