அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க கோரிக்கை.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றி வருகின்றனர்.
இதில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் விதிவிலக்கல்ல. அரசு ஊழியர்கள் வங்கிகளில் தவம் கிடப்பதால் பணியும்
பாதிக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி முன்பணம், கல்வி, குடும்ப தேவைக்காக பெற்ற கடன் தொகைக்காக பணம் எடுக்க சிரமப்படுகின்றனர்.  சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் ஊதியத்தில் 25 சதவீதத்தை வாடகையாக செலுத்துகி்ன்றனர். இதை தவிர மாதம் தோறும் குழந்தைகள் கல்விக்கட்டணம், மருத்துவச் செலவு உள்ளிட்ட செலவுகளை தற்போதைய வங்கி கட்டுப்பாட்டினால் மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். வருமான வரித்துறைக்கு கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கும் ஊழியர்கள் தங்கள் பண இருப்பை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.