தலைமை செயலக ஊழியர்கள் இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு
தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 15, 2017, 04:15 AM
சென்னை,
தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு பிரிவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கணேசன் செயல்பட்டார். இந்த அமைப்பினர் கடந்த 7-ந் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முடிவு செய்தனர்.
ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஈரோட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டத்தை 15.10.17 வரை தள்ளி வைக்கலாம் என்று கணேசன் கருத்து தெரிவித்தார். ஆனால் இதற்கு மற்றவர்கள் உடன்படவில்லை. இதனால் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டது. ஒரு அணியினர் வேலைக்கு சென்று விட்டனர். மற்றவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கணேசன் உள்பட போராட்டத்தில் ஈடுபடாத ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேற்று தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.
அதன் பின்னர் தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தலைமை செயலக திறந்தவெளி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது போராட்டத்தை தள்ளி வைத்தது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எழுந்தன.
எனவே பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்பட்டது. சங்கத்துக்குள் ஆமைகள் நுழைந்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்தனர். கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கவேண்டும் என்று பலர் குரல் எழுப்பினர். அந்த கருத்தின் அடிப்படையில் தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தில் பிளவு ஏற்பட்டது.
அந்த சங்கத்தின் ஒரு பிரிவினர், 15-ந் தேதியில் இருந்து (இன்று) தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்தனர். ஏற்கனவே ஜாக்டோ-ஜியோ நடத்தி வரும் காலவரையற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பட்டைகளை தலைமை செயலக ஊழியர்கள் பலர் அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.