டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் : சபாநாயகர் தனபால் அறிவிப்பு...
டிடிவி தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநரிடம் மனு கொடுத்ததால் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்களின் விவரம்:
செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), தங்கதமிழ்செல்வன்(ஆண்டிபட்டி), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), ரெங்சாமி (தஞ்சை), சுப்பிரமணியன் (சாத்தூர்), கென்னமாரியப்பன் (மானாமதுரை), சுந்தர்ராஜ் (ஒட்டபிடாரம்), தங்கதுரை (நிலக்கோட்டை), கதிர்காமு (பெரியகுளம்), வெற்றிவேல் (பெரம்பூர்), முத்தையா (பரமக்குடி), ஏழுமலை (பூந்தமல்லி), பார்த்திபன் (சோளிங்கர்), ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்), கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), பாலசுப்பிரமணியன் (ஆம்பூர்), உமாமகேஸ்வரி (விளாத்திக்குளம்) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றுமாறு 19 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனிடையே தமது கவனத்துக்கு கொண்டு வராமல் தன்னிச்சையாக 19 எம்.எல்.ஏ.க்களும் ஆளுநரை சந்தித்ததாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். இதனையடுத்து சபாநாயகர் 19 எம்.எல்.ஏ.க்களும் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தினகரன் ஆதரவாளராக இருந்த எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடி அணிக்கு தாவினார். இதில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும்கடந்த வாரம் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார். மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் புதுவையிலிருந்து கர்நாடகாவின் கூர்க்கில் உள்ள சொகுசுவிடுதியில் தற்போது தங்கியுள்ளனர். இதனிடையே பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல், தங்கதழிச்செல்வன் விளக்க அளிக்க கால அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் சபாநாயகர் கால அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏக்களை தகுதி இழப்பு செய்வதாக சபாநாயகர் தனபால்அறிவித்துள்ளார்.