நீரில் இருந்து மாசில்லா எரிபொருள் : அரசுப்பள்ளி மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு
இயந்திரமயமான இன்றைய வாழ்க்கைச்சூழலில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நடுத்தர மக்கள் கூட, டூவீலர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் தேவையும், நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அதிகபயன்பாட்டால் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, எரிபொருட்களில் இருந்து வெளிப்படும் புகையே மாசு பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் என்பதும் பரவலான தகவல். தற்போது நாம் பயன்படுத்தும் படிம எரிபொருட்களான பெட்ரோல் 60 வருடங்களும், நிலக்கரி 150 வருடங்களும், இயற்கை வாயு 60 வருடங்களும் மட்டுமே இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
அதே நேரத்தில், எதிர்கால தேவைக்காக மாசு இல்லாத எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதற்கான கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகள் மூழ்கியுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து மாசில்லா எரி பொருளை உருவாக்கி, அசரவைத்துள்ளார் அரசுப்பள்ளி மாணவி கலைச்செல்வி. சேலத்தை அடுத்த ஓமலூர் பாலகுட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்த இவர், கடந்த ஆண்டு, டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி கலைச்செல்வி கூறுகையில், ‘‘நான் தற்போது முத்தநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்தாண்டு பாலகுட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்தேன்.
அப்போது பள்ளி தலைமையாசிரியை கிரிஜா மற்றும் அறிவியல் ஆசிரியர் வரதராஜன் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தினால் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்து எரிபொருள் தயாரிப்பதை கண்டுபிடித்தேன். ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயக்கப்படும் வாகனங்கள் அதிக செயல்திறன் கொண்டவையாக இருக்கும். கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிடாது. இதனால், புவி வெப்பமயமாதலை தடுக்கலாம்.
தற்போது ஹைட்ரஜன் ஆற்றல் உற்பத்தி என்பது ஆராய்ச்சி நிலைகளில் மட்டுமே உள்ளது. இந்திய அரசு புதுப்பிக்ககூடிய வளங்களை உருவாக்க பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் எனது கண்டுபிடிப்பை மாவட்ட, மாநில அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்த ேபாது பரிசுகளும், பாராட்டுகளும் கிடைத்தது. ‘‘ஹைட்ரஜன் உலகம்’’ என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த 6வது தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் பாராட்டுகள் குவிந்தது. எதிர்காலத்தில் இதனை நாட்டுக்கு அர்ப்பணித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே லட்சியம்’’ என்றார்.
கலைச்செல்வியின் அப்பா சக்திவேல், அம்மா கவிதா இருவரும் சலவைத்தொழிலாளர்கள். அண்ணன் சதீஷ்குமார் முத்துநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கலைச்செல்வி படிப்பில் படுசுட்டி. கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் எப்போதும் சென்டம் வாங்குவார் என்கின்றனர் ஆசிரியர்கள்.