காலியாக உள்ள 931 இடங்களுக்கு வேளாண் பல்கலையில் கலந்தாய்வு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 பேர் மட்டுமே விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இன்னும் காலியாக இருக்கும், 931 இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு மற்றும் 19 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இங்கு, வேளாண்மை, தோட்டக்கலை, இளநிலை தொழில்நுட்ப படிப்புகள் என, 13 பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.நடப்பு கல்வியாண்டில் இப்படிப்புகளுக்கான, 2,820 இடங்களுக்கு, ஜூன் 19 முதல், 24 வரை, முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 2,157 இடங்கள் நிரம்பின. 'நீட்' தேர்வு அடிப்படையிலான, மருத்துவ மாணவர் சேர்க்கையால், காலியிடங்களின் எண்ணிக்கை, 1,627 ஆக அதிகரித்தது. இதற்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, கடந்த 28ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இறுதிநாள் கலந்தாய்வில் பங்கேற்க, 2,264 பேருக்கு அழைப்பு விடப்பட்ட நிலையில், 1,899 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர். கலந்தாய்வில் பங்கேற்ற, 365 பேரில், 331 பேர் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர்.
வேளாண் பல்கலை டீன் மகிமைராஜா கூறியதாவது:இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 696 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 931 இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். கலந்தாய்வில் பங்கேற்றோர், உரிய கல்லுாரியில், கல்விக்கட்டணத்தை செலுத்த வேண்டியது அவசியம். அசல் கல்விச்சான்றிதழ்களை, வரும் 4 ம் தேதி வரை சமர்ப்பிக்க அவகாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.