NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி
'நடப்பாண்டில், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாணவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருப்பதாக மாணவ அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. நீட் தேர்வில் மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏன் என்று சிபிஎஸ்இ-க்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுக்கென பொதுவான வினாத்தாள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள், மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.