ரூ.900 கோடியை திருப்பி அனுப்பியதால் கல்வித்துறைக்கு பெரும் பின்னடைவு : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு...
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2012ல் வெளியிடப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கான ஐசிடி எனப்படும் ஒருங்கிணைந்த கணினி அறிவியல் பாடத்திட்டம் தற்போது 1,000 பள்ளிகளுக்கு மட்டும் என வரைவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து தனியார் பள்ளிகளையே அதிக அளவில் நாடிச்செல்லக்கூடிய கட்டாயம் ஏற்படும். இதனால் அரசு பள்ளிகளை மட்டுமே நம்பியிருக்கின்ற மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்காது என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
மனித வள மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.900 கோடி நிதி கணினி அறிவியல் பாடத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதிப்பணத்தையும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியது தமிழக அரசு.தமிழக அரசு கணினி ஆய்வகங்கள், கணினி சார்ந்த கல்வி உபகரணங்கள் ஆகியவற்றிற்காக 6 முறைக்கு மேல் தனியார் நிறுவனங்களுக்கு “டெண்டர்” விட்டு ரத்து செய்திருக்கிறது. இத்தகைய செயலால் தமிழக கல்வித்துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கின்ற சுமார் 90 லட்சம் மாணவர்களின் கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை கற்பிக்கவும், கணினி பாடத்தை கற்பிக்க வேலையில்லாமல் இருக்கின்ற சுமார் 40 ஆயிரம் பி.எட். கணினி ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கிடவும், மத்திய அரசின் நிதியை முறையாக, முழுமையாக பயன்படுத்திடவும் தமிழக அரசு முன்வர வேண்டும்