ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்..
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், 'ஆதார்' எண்ணை, 'பான் கார்டு' எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.நடப்பு ஆண்டில், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், 'பான்' எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.
வருமான வரி இணையதளத்தில், அதற்கான வசதிகள் செய்யப்பட்டன. ஒரே நேரத்தில், ஏராளமானோர் இணைக்க முயன்றபோது, இணையதளம் முடங்கியது. அதனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான, ஜூலை, 31க்குள், பலர் அதை செய்ய முடியவில்லை.
அதைத் தொடர்ந்து, இரு எண்களையும் இணைப்பதற்கான அவகாசம், ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டது. அது, நாளையுடன் நிறைவடைகிறது. அதன்பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
என்ன செய்யலாம்? : இதுவரை இணைக்காதோர், 'income taxindiaefiling.gov.in' என்ற இணையதளத்தில், 'linkaadhaar' என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், 'கிளிக்' செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இரு எண்களை இணைக்க முடியும்.
இதுபோல், மொபைல் போனில், UIDPAN என முதலில், 'டைப்' செய்து, சிறிது இடைவெளி விட்டு, ஆதார் எண், மீண்டும் இடை வெளிவிட்டு, பான் எண் ஆகியவற்றை, 'டைப்' செய்து, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பினால், இணைக்க முடியும்.