NEET - தமிழகத்தில் நாளை மறுநாள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு : மாநில சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்த நீட் தேர்வின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் 4-ம் தேதி வரை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்த தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறாது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே MBBS சேர்க்கையில் பங்கபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு கோரும் சட்டத்தை அமல்படுத்தினால் குழப்பமே ஏற்படும் என்றார். எனவே அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தர கூடாது என மத்திய அரசுக்கு அவர் பரிந்துரைத்தார். இதனை ஏற்ற மத்திய அரசு, தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியது. ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்களிக்க முடியாது. ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தமிழக அரசின் அவசர சட்டம் உள்ளது. எனவே தமிழக அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது என மத்திய அரசு கூறியது. இதனை அடுத்தே தமிழகத்தின் அவசர சட்டம் ஒப்புதல் அளிக்கப்படாமல், நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை மறுநாள் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கி நடைபெறும் என மாநில சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாளை மாணவர் தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.