சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?
இன்று முதல் நிர்வாக பணிகளை துவக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய செயலருக்கு, அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் ஆதிக்கத்தை சமாளிப்பது உட்பட, பல சவால்கள் காத்திருக்கின்றன.
தமிழக பள்ளிக்கல்வி செயலராக, மார்ச், ௬ல் உதயசந்திரன் பொறுப்பேற்றார்.
நிர்ப்பந்தம் காரணம் : அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வியில் பல மாற்றங்களை, அவர் அமல்படுத்தினார். இதற்கு, பெற்றோர், மாணவர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, சிலரின் நிர்ப்பந்தம் காரணமாக, பாடத்திட்டத்துக்கான பள்ளிக் கல்வி செயலராக மட்டும், உதயசந்திரன் மாற்றப்பட்டுள்ளார்.
புதிய பள்ளிக்கல்வி செயலராக, முதன்மை செயலர் அந்தஸ்தில் உள்ள, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், இன்று முதல் அதிகாரபூர்வமாக பணிகளை துவக்க உள்ளார்.
அவரை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து, அவரது கட்டுப் பாட்டில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உதயசந்திரன் மேற்கொண்ட மாற்றங்களை தொடர்வதில், பிரதீப் யாதவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆதிக்கத்தை சமாளித்து, நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்
இட மாற்றம், பதவி உயர்வு, 'டெண்டர்' வழங்குவது என, பல பணிகளில், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், ஆளுங்கட்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் அணிகளை சேர்ந்தவர்களை சமாளிக்க வேண்டும்
மத்திய அரசின் பல நிதியுதவி திட்டங்களை, அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப, மாற்று பணிகளுக்கு மாற்ற வேண்டும்
புதிய பாடத்திட்ட பணி களை சுதந்திரமாக மேற்கொள்ள, செயலர் உதயசந்திரன், பாடத்திட்டக்குழு மற்றும் அதிகாரிகளுக்கு, அனுமதி வழங்க வேண்டும்
பள்ளிக்கல்வியில் செயல்படும் அதிகாரி களின், ஆளுங்கட்சி செல்வாக்கை சமாளித்து, அவர்களை ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும்
பல்வேறு சவால்கள் : 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ள போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து, பள்ளிக் கல்வி பணி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள, பிளஸ் ௧ பொது தேர்வை, புதிய விதிகளின்படி, குழப்பமின்றி நடத்த வேண்டும்
'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும்.
இப்படி பல்வேறு சவால்கள், புதிய முதன்மை செயலருக்கு காத்திருக்கின்றன.