மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் !
மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் !
"தமிழக அரசு இயந்திரமே ஸ்தம்பித்து கிடக்கிறது. எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாம,துரு பிடிச்சு கிடக்கு" என்ற விமர்சனம் அனைத்து கட்சிகளாலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால்,அவர்களே கூட மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு தமிழக அரசின் ஒரே ஒரு துறை மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. அது பள்ளிக் கல்வித்துறை. பல்வேறு அதிரடி,முன்மாதிரி திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து, பள்ளிக் கல்வித்துறை வண்டியை முன்னேற்ற பாதையில் உருள வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம்,அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையனும்,அந்த துறையின் செயலாளர் ப.உதயச்சந்திரனும்தான்.
உதயச்சந்திரனின் அட்ராசக்கை ரக திட்டங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பேதும் சொல்லாமல்,ஒ.கே சொல்ல, அந்த துறையில் பல அதிரடி மாற்றங்கள் கடைப்பரப்பப்படுகிறது.
இதோ, அடுத்ததாக தமிழக அளவில் உள்ள மூவாயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, தன்னார்வத்தில் தமிழகம் முழுக்க ஸ்பான்ஸ்கர்கள் மூலமாக நிதி திரட்டி அத்தகைய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும், 25 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை நேற்று தலைமைச் செயலகத்திற்கு அழைத்த ப,உதயச்சந்திரனை வைத்து தமிழ்நாடு முழுக்க மூவாயிரம் அரசு பள்ளிகளை ரெஃபர் பண்ண சொல்லி அறிவுறுத்தி, அனுப்பி இருக்கிறார்.
'ப.உதயசந்திரன், தலைமை ஆசிரியர்கள்' சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்று வந்த நமக்கு தெரிந்த தலைமை ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம்.
"கடந்த வாரமே தமிழ்நாடு முழுக்க தன்னார்வத்தில் தங்கள் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களை சிறப்பாக செய்து வரும் 25 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை 8 ம் தேதி சென்னைக்கு வர சொல்லி சர்க்குலர் வந்தது. நாங்களும் ஆர்வமா நேற்று போனோம். அப்போது, எங்க ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து,பாராட்டிய ப,உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்,'உங்க செயல்பாடுகள் உண்மையில் போற்றத்தக்கது. அரசு செய்ய வேண்டிய பணிகளை நீங்களே செய்வதற்கு,உங்களுக்கு இயல்பிலேயே பெரிய அர்ப்பணிப்பு திறன் இருக்க வேண்டும். அந்தத் திறன் உங்களுக்கு அமைந்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் தனிபட்ட முறையில் உங்கள் பள்ளிகளில் செயல்படுத்திய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் ஏற்பாட்டை இப்போது அரசே செய்யப் போகிறது. தமிழகம் முழுக்க மூவாயிரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முதல்கட்டமா அமைக்க போறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட இருக்கு. உங்களை அழைத்ததற்கு காரணம், உங்க மூலமாகதான் அந்த மூவாயிரம் பள்ளிகளை செலக்ட் செய்ய போறோம்.
அதாவது, அரசு இவ்வளவு செலவு பண்ணி ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைத்து கொடுத்தாலும், அதை பயன்படுத்தாமல் பல பள்ளிகளில் வீணடித்துவிட கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதோடு, பல பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கும் அளவிற்கு அடிப்படை கட்டமைப்பும் இருக்காது. நாங்களே தமிழகம் முழுக்க போய் மூவாயிரம் பள்ளிகளை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்படகூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதோடு,எங்கள் துறையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பள்ளிகள் தேர்வு செய்யும் விசயத்தில் விருப்பு வெறுப்போடு செயல்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அதனால், உண்மையான அக்கறையோடு கல்வி போதிக்கும் விசயத்தில் செயல்படும் உங்க மூலமா அந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்க மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும், கல்வி போதிப்பதில் அர்ப்பணிப்போடு செயல்படும், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அற்ற மூவாயிரம் பள்ளிகளை தேர்ந்தெடுத்து பதினைந்து நாள்களுக்குள் எனக்கு தெரிவியுங்கள். அரசு பள்ளிகளை நாம் அனைவரும் சேர்ந்து அடுத்த லெவலுக்கு கொண்டு போவோம்'ன்னு சொல்ல,எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கலை. 'கண்டிப்பா தேர்ந்தெடுத்து சொல்றோம் சார். எங்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைச்சதால, எங்களால் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்க முடிஞ்சது. ஆனால், எங்களை போலவே ஆர்வமா செயல்பட மனமிருந்தும் நிதியுதவி கிடைக்காமல் பல பள்ளி ஆசிரியர்கள் தமிழகம் முழுக்க கைகளை பிசைஞ்சுகிட்டு நிற்கிறாங்க சார். அவங்களுக்கு இப்படி அரசே ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைச்சு கொடுத்தா, தங்கள் பள்ளியை சிறப்பாக்குவாங்க சார். தகுதியான பள்ளிகளை தேர்ந்தெடுத்து சொல்றோம் சார்' என்று சொல்லிவிட்டு வந்தோம்" என்றார்கள்.
இதுசம்மந்தமான, பிராசஸ் நடந்த திட்ட அப்ரூவலுக்காக அரசின் பார்வைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் ஒ.கே செய்தால், தமிழகம் முழுக்க மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட்டு, அரசு பள்ளிகளின் கல்வி கற்விக்கும் வழிமுறைகள் அடுத்த லெவலுக்கு போகும் என்பது உறுதி.