ஒரே பெயரிலான இன்ஜி., கல்லூரிகளால்
குழப்பம்...
'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், ஒரே பெயர் உடைய கல்லுாரிகளால் குழப்பம் ஏற்படலாம் என்பதால், மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்' என, அண்ணா பல்கலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 533 இன்ஜி., கல்லுாரிகளில், 1.68 லட்சம் இடங்களுக்கு, பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு கவுன்சிலிங் நடத்துகிறது. இந்த கவுன்சிலிங், அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்து வருகிறது. தொழிற்கல்வி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் முடிந்து, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. அவர்களுக்கு, இன்று இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், 23ம் தேதி முதல், ஆக., 11 வரை, நடக்கிறது.
கவுன்சிலிங்கின் போது, தங்களுக்கு பிடித்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு களை, அதன் குறியீட்டு எண் மூலமே தேர்வு செய்ய வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஏனெனில், ஒரே பெயரில், சிறிய வித்தியாசங்களுடன் பல கல்லுாரிகள் உள்ளன.அதனால், குறியீடு எண் இல்லாமல், கல்லுாரியை தேர்வு செய்தால், தவறான கல்லுாரியை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஒரு முறை தேர்வு செய்தால், பின் கல்லுாரியை யோ, பாடப்பிரிவையோ மாற்ற முடியாது. எனவே, கல்லுாரி குறியீட்டு எண்ணை, தவறாமல் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டியின், www.tnea.ac.in என்ற இணையதளத்தில், ஒரே பெயரிலுள்ள கல்லுாரி களின் பெயர்கள் மற்றும் அதன் குறியீட்டு எண்களை தெரிந்து கொள்ளலாம்.