சி.ஏ., இறுதி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை.....
ஆடிட்டர் பணிக்கான, சி.ஏ., இறுதித் தேர்வில், அகில இந்திய அளவில், வேலுார் மாணவர் இரண்டாம் இடமும், சென்னை மாணவி ஐந்தாம் இடமும் பெற்றுள்ளனர். இந்த தேர்வில், மொத்தம், 23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
'சார்ட்டட் அக்கவுன்டன்ட்' என்ற, ஆடிட்டர் பணியில் சேர, பட்டதாரிகள், சி.ஏ., தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். முதலில், பொதுத்திறன் தேர்வான, சி.பி.டி., நடத்தப்படும். அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஐ.பி.சி.சி., என்ற ஒருங்கிணைந்த போட்டி தேர்வு; அதன் பின், ஆடிட்டிங் நிறுவனத்தில், மூன்று ஆண்டு தொழில் பயிற்சி; இதைத்தொடர்ந்து, இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு, மே மாதம் நடந்த இறுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், இரண்டு பாடப்பிரிவுகளில், 10 ஆயிரத்து, 276 பேர், சி.ஏ.,வாக தகுதி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில், 22.98 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அகில இந்திய அளவில், மஹாராஷ்டிரா மாநிலம், டொம்பிவாலியை சேர்ந்த, ராஜ் பரேஷ் ஷேத் என்பவர், மொத்தம், 800க்கு, 630 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தின் வேலுார் மாணவர் அகத்தீஸ்வரன், 602 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடமும், மும்பையை சேர்ந்த கிருஷ்ண பவன் குப்தா, 601 பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.வேலுார் மாணவர் அகத்தீஸ்வரன், சென்னையிலுள்ள, எம்.டி.எஜூகேர் நிறுவனத்தில், இறுதி தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளார். அதேபோல, சென்னை பல்கலையின் முன்னாள் மாணவி, கொரட்டூரை சேர்ந்த ஐஸ்வர்யா, 584 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்.
தனிப்பயிற்சி இன்றி சாதித்த மாணவி ஐந்தாம் இடம் பெற்ற, சென்னை மாணவி ஐஸ்வர்யா, கொரட்டூர் பக்தவத்சலம் வித்யாஷ்ரம் பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின், முகப்பேர் டி.ஏ.வி., பள்ளியில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், வணிகவியல் மற்றும் கணிதம் இணைந்த பாடப்பிரிவில், 485 மதிப்பெண் பெற்றுள்ளார். தொடர்ந்து, சென்னை பல்கலையில், பி.காம்., படிப்பை தொலை நிலையில் முடித்துள்ளார். ஐ.பி.சி.சி., போட்டி தேர்வுக்காக, சென்னையிலுள்ள, எம்.டி.எஜூகேர் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பின், மூன்றாண்டு தொழிற்பயிற்சிக்காக, பி.பி.விஜயராகவன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
இறுதி தேர்வு குறித்து, ஐஸ்வர்யா கூறுகையில், ''நான் பணியாற்றிய நிறுவனத்தில், இறுதி தேர்வுக்கு, செய்முறையாக பயிற்சி கிடைத்தது. மற்ற நேரங்களில், ஆன்லைன் வகுப்பு மற்றும் வீடியோ பாடங்களை பார்த்து பயிற்சி பெற்றேன்; தனியாக பயிற்சி மையத்துக்கு செல்லவில்லை,'' என்றார். இவரது தந்தை, ராஜன், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயக்குனராகவும், தாய் சித்ரா, இல்லத்தரசியாகவும் உள்ளனர்.