இனி பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் குறை தீர் முறை...
பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், குறை தீர் முறை அறிமுகமாகி உள்ளதை, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வரவேற்று உள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் என, பல இயக்குனர்களுக்கு தனியாக அலுவலகங்கள் உள்ளன.
அனைத்துக்கும் தலைமை அலுவலகமாக, பள்ளிக்கல்வி இயக்குனரகம் செயல்படுகிறது. மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், இடமாறுதல், ஓய்வூதிய பிரச்னை, பள்ளிகளின் அங்கீகாரம், நலத்திட்ட உதவிகள் என, அனைத்து நடவடிக்கைகளுக்கும், தலைமை அதிகாரியாக, பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்படுகிறார்.
கோரிக்கை : இதனால், ஆசிரியர்கள், ஊழியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க வருகின்றனர். பின், கோரிக்கை மனு நிலை குறித்து தெரிந்து கொள்ளவும், மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தவும், பல முறை அலையும் நிலை இருந்தது. இதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் முற்றுப்புள்ளி வைத்து, புதிய முறையை அறிமுகம் செய்துள்ளார்.
இயக்குனர் அலு வலகத்திற்கு வருவோரின், பெயர், முகவரி மற்றும் மொபைல்போன் எண்களும், அவர்களின் கோரிக்கை விபரங்களும், பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.பின், பார்வையாளர் களின் காத்திருப்பு அறைக்கே, இயக்குனர் வந்து குறைகளை கேட்கிறார். மனுவை, உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, பதில் அனுப்பும்படி உத்தரவிடுகிறார். கோரிக்கையின் நிலை, அது, சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பன போன்ற விபரங்களை, மனுதாரர்களுக்கு மொபைல் போனில் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மனு கொடுத்த ஒரு வாரத்திற்குள், மனுதாரர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரக ஊழியர்களே, போனில் தகவல் அளிக்கின்றனர்.
அலைச்சல் குறைவு : கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர்கள் எந்த துறை அதிகாரியை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர்களும், தனியார் பள்ளி நிர்வாகிகளும் கூறுகையில், 'இயக்குனரகத்தின் புதிய முறை, எங்களின் அலைச்சலை குறைத்துள்ளது. 'எங்களின் கோரிக்கையின் நிலை என்ன; அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையும், தெரிந்து கொள்ள முடிகிறது' என்றனர்.