அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறதா?... ஆசிரியர்கள் கருத்து
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தி.மு.க எம்எல்ஏ., சேகர்பாபு, தமிழக அரசுப் பள்ளிகளின் நிலைகுறித்து எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மேலும், ‘ஆங்கில மொழியின் மீதான மோகத்தால்தான் மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம். தற்போது, தனியார் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது’ என்று உறுதியாகப் பேசியுள்ளார் செங்கோட்டையன்.
சட்டப்பேரவையில், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தது எந்த அளவுக்கு உண்மை... அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறதா? தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரு கிறதா. .. போன்ற கேள்விகளுக்கு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் கூறிய பதில் பின்வருமாறு...
வசந்த், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கடலூர்:
’அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துவருவது உண்மைதான். பள்ளிகளின் தரத்தை உயர்த்த, அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுடன், கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசுத் தரப்பில் கணினிப் பயிற்சி தரப்படுகிறது, ஆனால், தொடக்கப்பள்ளிகளில் கணினி கிடையாது. கணினிகூட இரண்டாவதுபட்சம்தான். தமிழக அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமானது’
மு.தென்னவன், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி :
’அரசுப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்துவிட்டது. தமிழக அரசு, இலவச லேப்டாப் கொடுத்துவருவது வரவேற்கத்தக்கது. தற்போது அரசுப் பள்ளிகளில் வைஃபை வசதி ஏற்படுத்தித் தருவதாகவும் அரசு அறிவித்துள்ளது. தொழில்நுட்ப வசதிகள் மட்டுமே பள்ளிகளின் தரத்தை நிர்ணயிக்காது. அடிப்படை வசதிகள்தான் முக்கியம். பாதுகாப்பான குடிநீர், கழிவறை, இவை இரண்டும்தான் பள்ளிகளின் தரத்தை நிர்ணயிக்கும். ஒரு சின்ன உதாரணம்.. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் நாப்கினுக்கு தனி டஸ்ட்பின் வைக்கப்பட்டுள்ளது?’ என்றனர்.