'கோரிக்கைகளை நிறைவேற்ற வழக்கு' :அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு....
திருச்சி: ''தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சிக் காலங்களில், அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதை வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி பரிசீலிக்கப்படும்,'' என, அரசு பணியாளர் சங்கத்தின், சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.
திருச்சியில், நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை, அக்., வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஊழியர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, 25 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
மூடப்பட்ட, 'டாஸ்மாக்' கடைகளில் பணியாற்றி வேலை இழந்துள்ளவர்களை, கல்வித்தகுதி அடிப்படையில், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்க வேண்டும்.
அரசு துறைகளில், பணியாளர் நியமனம், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில், ஊழலை தவிர்த்து, நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்ற, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 27ல், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஆக., 11ல், மாநிலம் முழுவதும் உள்ள அரசு பணியாளர்களை ஒன்று திரட்டி, கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சிக் காலங்களில், அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை. இதை வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.