வைரலாகி வரும் 2-ம் வகுப்பு படிக்கும் பெரியமருது எழுதும் அழகுத் தமிழ் வீடியோ! #GovtSchoolStudent
"அரசுப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு தன்னலமற்று உழைக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்கள். தொடரட்டும் அவர்களின் பணி"
‘என் மகன் எட்டாம் வகுப்புப் படிக்கிறான். ஆனால், தமிழ் படிக்கவோ எழுதவோ தெரியல' இப்படிக் கூறும் பெற்றோரைச் நாம் பார்த்திருப்போம். எட்டு வருடங்கள் படித்தும் தாய்மொழியான தமிழில் படிக்கவும் எழுதவும் முடியவில்லை என்பது நம்மை ஆச்சர்யப்படுத்துவதான் இல்லையா? சமீபத்தில், அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் பெரியமருதுவின் எழுதும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது. அந்த வீடியோவைப் பார்க்கும்போது ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒருசேர நம்மைச் சூழந்துகொள்கின்றன. அந்த வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஆர்வமா? பள்ளி நோட்புக்கில் மூன்று கேள்விகள் எழுதப்பட்டிருந்தன.
1. பசு எங்கு மேய்ந்தது?
2. கன்றுக்குட்டி என்னவெல்லாம் செய்தது?
3. பசு, கன்றுக்குட்டியிடம் எவ்வாறு அன்பு காட்டியது?
https://www.youtube.com/feature=player_embedded#t=0
இவைதாம் அந்தக் கேள்விகள். இதற்கான பதிலை, ஓர் இடத்திலும் தவறு இல்லாமல் எழுதுகிறார் இரண்டாம் வகுப்புப் படிக்கும் பெரியமருது. அதுவும் வார்த்தைகளை ராகம்போட்டுக்கொண்டு படிப்பது கொள்ளை அழகு. எந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் எனத் தேடினோம்.
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், பாதிரி எனும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் மாணவர்தான் அவர். அப்பள்ளியின் ஆசிரியர் கணபதியிடம் பேசினோம்.
கணபதி“பெரியமருது மட்டுமல்ல, எங்கள் பள்ளியின் ஒன்றாம், இரண்டாம் வகுப்புப் படிக்கும் அனைத்து மாணவர்களும் தெளிவாகப் படிக்கவும் எழுதவும் செய்வார்கள். இத்தனைக்கும் அவர்கள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி எல்லாம் படித்தவர்கள் அல்ல. நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள்தாம். இதற்குக் காரணம், இருவர்தாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒலக்கூர் ஒன்றிய மையத்தில் நடைபெற்ற வகுப்பில், சென்னையைச் சேர்ந்த ஆசிரியை கனகலெட்சுமி என்பவர் புதிய முறையில் தமிழைக் கற்பிக்கப் பயிற்சி அளித்தார்.
‘தொல்காப்பியரின் சொற்பிப்பு’ என்று அதற்கான பெயரைக் கூறினார். அவர்தான் இந்த வெற்றிக்கு முதல் காரணம். அடுத்தது, அந்தப் பயிற்சியை வகுப்பில் நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்கள். நீங்கள் பார்த்த பெரியமருதுவின் ஆசிரியர் கிறைஷ்டியன் நிஷா. அவர், வகுப்பு மாணவர்கள் அனைவருக்குமே சிறப்பான பயிற்சி அளித்துவருகிறார். வழக்கமாகக் கற்பிப்பதை விட, தொல்காப்பியரின் சொற்பிப்பு முறை எளிமையானதாக இருக்கிறது. மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதியவும் உதவுகிறது" என்கிறார் கணபதி.
'தொல்காப்பியரின் சொற்பிப்பு' முறை என்றால் என்னவென்ற கேள்வி எழுந்ததும் பயிற்சி அளித்த ஆசிரியை கனகலெட்சுமியிடமே கேட்டோம். இவர் சென்னை, ஷெனாய் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார்.
“தமிழைத் தமிழாகக் கற்பிப்பதுதான் தொல்காப்பியரின் சொற்பிப்பு முறை. உதாரணமாக, 'அ' எனும் எழுத்தை எழுதவதற்கு கனக லெட்சுமிமாணவர்களிடம் இப்படிக் கூற வேண்டும். முதலில், சுழியை எழுதிகொள்ளுங்கள். பின் கீழ்ப் பிறை, அடுத்து, படுக்கைக் கீற்று, இறுதியாக மேலிருந்து இறங்கும் கீற்று எழுதினால் 'அ' எழுதிவிடலாம். இப்படிச் சொன்னால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் புரியுமா என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி. முட்டைப் போடு, பக்கத்துல கோடு போடு, குறுக்குக் கோடு போடு என்றால் பிள்ளைகளுக்குப் புரியும் என்றால் அவற்றையே திருத்தமாகச் சொன்னாலும் புரியும். இதை ஒரு தொடர்ப்பயிற்சியாகச் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளதால் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். சின்ன வயது பிள்ளைகளுக்கு மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அந்தக் காலக்கட்டத்தில், இந்த முறை பயிற்சி நிச்சயம் பலன் அளிக்கும். அதற்கு நல்ல உதாரணம் பெரிய மருது எழுதியதைப் பார்க்கிறீர்கள்.
பதினேழு ஆண்டுகளுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஒரு கையேடு தந்திருந்தார்கள். அதில் கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி முறைதான் இது. (நன்னூல் விருச்சிகத்தில் இது உள்ளது.) அந்தப் பயிற்சியை இன்னும் எளிமையாக்கி, மாணவர்களிடையே கொண்டுசேர்க்கிறேன். ஒலக்கூர் ஒன்றியத்தைத் தேர்ந்தெடுத்து, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்ததன் பலன் இப்போது நன்றாகத் தெரிகிறது. தொடக்க வகுப்புகளிலேயே மொழியைச் சரியாகக் கற்றுக்கொடுத்துவிட்டால் அது அவர்களின் வாழ்நாள் முழுக்க உதவும்." எனக் கூறும் கனகலெட்சுமியின் குரல்களில் வழிகிறது நம்பிக்கை.
"அரசுப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு தன்னலமற்று உழைக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்கள். தொடரட்டும் அவர்களின் பணி"..