தமிழகத்தில் பள்ளிப் பாடத்திட்டம் மாறுகிறது: 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்தி புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களைப் புதிதாக உருவாக்கவும் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் ரேங்க் முறை ரத்து என தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தமிழகத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்த 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தக் குழுவுக்கு ஐஐடி கான்பூர் முன்னாள் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவினர் விவரம்:
குழுவில், முனைவர் ஆர்.ராமானுஜம், பேராசிரியர், கணித அறிவியல் நிறுவனம், தரமணி, சென்னை, முனைவர் ஈ.சுந்தரமூர்த்தி, முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முனைவர்.கு.ராமசாமி, துணைவேந்தர், வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை, சு.தியோடர் பாஸ்கரன், எழுத்தாளர் மற்றும் சூழலியல் ஆய்வாளர், பெங்களூரு, முனைவர் சுல்தான் அஹமது இஸ்மாயில், முன்னாள் துறைத் தலைவர், உயிர் தொழில்நுட்பவியல் துறை, புதுக் கல்லூரி, முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், பேராசிரியர், சென்னை, கலாவிஜயகுமார், கல்வியாளர், சென்னை,டிராட்ஸ்கி - மருது, ஓவியர் அகியோர் உறுப்பினர்களாகவும்.சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாணை விவரம்:
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்:"கல்வி முறையில் உள்ள குறைகளைக் கண்டறிவதற்காக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.தரமான கல்வி என்னும் இலக்கு நோக்கி உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல், சமூக பொருளாதார வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டி உள்ளதாலும், தொழிற்கல்விப் பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லவும், ஏற்ற வேலைவாய்ப்பினைப் பெறவும், வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பவியல் / கணினிப் பாடத்தை அறிவியல் பாடத்திடன் இணைத்துக் கற்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தங்களைப் புதிதாக உருவாக்கவும் அவ்வாறு உருவாக்கும்போது கற்றல், படைப்பின் பாதையில் இனிமையாக அமையவும் தமிழர்தம் தொன்மை, வரலாறு பண்பாடு மற்றும் கலை இலக்கிய உணர்வுடன் அறிவுத் தேடலுக்கு வழிவகுப்பதாக புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் அமையவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.