'நாட்டா' நுழைவு தேர்வில் குளறுபடி : மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை
பி.ஆர்க்., என்ற, கட்டடக்கலை படிப்புக்கான, 'நாட்டா' நுழைவு தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், 'மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்' என, கல்லுாரி நிர்வாகிகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவதை போல, பி.ஆர்க்., என்ற கட்டடக்கலை படிப்பிலும் சேரலாம். தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், 4,000 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாணவர்கள் சேர்க்கப்படுவர். பி.ஆர்க்., படிப்பில் சேர, 'நீட்' போன்று, தேசிய அளவில், 'நாட்டா' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, ஆண்டு தோறும், மே, ஜூனில், ஆன்லைனில் நடத்தப்படும். மாணவர்களின் விண்ணப்பத்துக்கு ஏற்ப, ஆன்லைனில் தினமும் தேர்வு நடத்தப்படும்.இந்த ஆண்டு, 'நாட்டா' நுழைவு தேர்வு விதிகள், திடீரென மாற்றப்பட்டு, நாடு முழுவதும் ஒரே நாளில், ஏப்., 16ல், எழுத்து தேர்வு நடந்தது. இதுகுறித்து, கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சரியான அறிவிப்பு வழங்கவில்லை. அத்துடன், இந்தத் தேர்வில் புதிதாக, கணித தாள் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்தும், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்ற குளறுபடிகளால், தமிழக மாணவர்கள், பி.ஆர்க்., படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகிகளும், மாணவர்களும் கூறியதாவது: மருத்துவ படிப்பில், 'நீட்' தேர்வு போன்று, பி.ஆர்க்., படிப்பிற்கான நுழைவு தேர்வு குறித்தும், தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த ஆண்டு, 'நாட்டா' தேர்வு குளறுபடிகளால், ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள், தேர்வை எழுத முடியாமல், பி.ஆர்க்., படிப்பில் சேர முடியுமா என்ற, குழப்பத்தில் உள்ளனர்.எனவே, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மீண்டும் தேர்வை நடத்த, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.