புதிய பாடப்பிரிவுக்கு ஆசிரியர் பற்றாக்குறை
அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு, பேராசிரியர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்திலுள்ள, 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஐந்து ஆண்டுகளில், 959 புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இதில், ஒவ்வொரு இளநிலை பாடப்பிரிவுக்கும், தலா, ஆறு; முதுநிலையில் தலா, இரு பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு புதிய பேராசிரியர்களை நியமிக்கவில்லை. அதனால், ஏற்கனவே பணியாற்றும் பேராசிரியர்களுக்கு, கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டுள்ளது. பல கல்லுாரிகளில், பேராசிரியர்கள் இல்லாமல் பாடம் நடத்த முடியவில்லை. அதனால், தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் உள்ளது. எனவே, வரும் கல்வி ஆண்டிலாவது, புதிய பாடப்பிரிவுக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.