உடற்கல்வி ஆய்வாளர் நியமனம் - பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஐகோர்ட் புது உத்தரவு.....
தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கடந்த 1985 முதல் 1990 வரை உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மோகன் குமார் உள்ளிட்ட 8 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
உடற்கல்வி ஆசிரியர்களாக 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளோம். நாங்கள் கிரேட் 1 உடற்கல்வி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளோம். கிரேட் 1 உடற்கல்வி இயக்குநர்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுள்ளவர்கள்.
கடந்த 2016 மே 10ம் தேதி பள்ளிக்கல்வி இயக்குநர் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பதவி உயர்வு பெறுபவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடும், நேரடி நியமனம் 50 சதவீதமும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பதவி உயர்வு அடிப்படையில் எங்களுக்கு மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்கள் பதவியில் 50 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும்.
ஆனால், பள்ளிக் கல்வித்துறை அந்த நடைமுறைகளை மறைத்துவிட்டு 2009 ஜூலை 10ம் தேதியிட்ட அரசாணையின் அடிப்படையில் கிரேட் 1 உடல்கல்வி இயக்குநர்களை மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்களாக நேரடியாக நியமனம் செய்து வருகிறார்கள்.
இதனால், எங்களுக்கு வரவேண்டிய 50 சதவீத வாய்ப்பு பறிபோகிறது. எனவே, மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்கள் நியமனம் தொடர்பான பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கோமதிநாயகம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்கள் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.