ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகங்கள் விற்பனை துவக்கம்........
I முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான, பாடப்புத்தகங்கள் விற்பனை, மே, 26ல், துவங்கி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 7ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பாட புத்தகங்கள், நோட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
பல தனியார் பள்ளிகள், புத்தகங்களை மாணவர்களே வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளன. எனவே, மாணவர்களுக்கு நேரடியாக புத்தகம் விற்பனை செய்யும் பணியை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவக்கி உள்ளது. ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து பாடப்பிரிவுகளுக்கான புத்தகங்களின் விற்பனையும் துவங்கி உள்ளது.
பாடநுால் கழக விற்பனை மையங்களிலும், மாவட்ட பாடநுால் கழக மண்டல கிடங்குகளிலும், ரொக்க பணம் செலுத்தி, புத்தகங்கள் வாங்கலாம். தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், www.textbookcorp.tn.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு மூலமும், புத்தகங்களை கொள்முதல் செய்யலாம்.
ஆன்லைனில் பதிவு செய்யும் போது, புத்தகங்களுக்கான தொகையை, 'நெட் பேங்கிங்' மூலம் செலுத்த வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள், கூரியர் மூலம், மாணவர்கள் பதிவு செய்த முகவரிக்கு, இரண்டு நாட்களில் அனுப்பப்படும்.
இதுகுறித்து, தமிழ்நாடு பாடநுால் கழக மேலாண் இயக்குனர், ஜெகநாதன் கூறியதாவது:
தற்போது, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, முதல் பருவ பாட புத்தகங்களும்; 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான புத்தகங்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எந்த பாடப்பிரிவு புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு இல்லை. கூடுதல் விலை கொடுத்து, வேறு யாரிடமும் புத்தகங்கள் வாங்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்......