சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு - நொய்டா மாணவி முதலிடம்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்ச்சி பட்டியலில், மத்திய
அரசு பள்ளிகள் முதல் இடத்திலும், தனியார் பள்ளிகள் கடைசி இடத்திலும் உள்ளன.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்தத் தேர்வை, 10 ஆயிரத்து, 673 பள்ளிகளை சேர்ந்த, 10.20 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இவர்களில், 8.37 லட்சம் பேர், அதாவது, 82.02 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டை விட, இது, 1.03 சதவீதம் குறைவாகும். மாணவர்களில், 78; மாணவியரில், 87.50 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நுாற்றுக்கு நுாறு : உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த, அமிட்டி பள்ளி மாணவி, ரக் ஷா கோபால், 498 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்று உள்ளார். இவர், ஆங்கிலம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியலில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
பள்ளிகள் அளவில், மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகள், 95.73; கேந்திரிய
வித்யாலயா பள்ளிகள், 94.6 சதவீதத்துடன், தேர்ச்சியில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
அரசு பள்ளிகள், 82.29; அரசு உதவி, 81.63; மத்திய திபெத்திய பள்ளி, 83.57 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 79.27 சதவீதத்துடன், தேர்ச்சியில் கடைசி இடத்தில் உள்ளன.மொத்த மதிப்பெண்ணில், 95 சதவீதத்திற்கு மேல், 10 ஆயிரத்து 91 பேர்; 90 சதவீதத்திற்கு மேல், 63 ஆயிரம் பேர் பெற்றுஉள்ளனர். மண்டல அளவில், திருவனந்தபுரம் முதல் இடத்திலும், சென்னை மற்றும் டில்லி, இரண்டு, மூன்றாம் இடத்தையும் பிடித்து உள்ளன.
19 கே.வி.,க்கள் 'சென்டம்' : தமிழகத்தில் உள்ள, 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 19 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள, கே.வி.,யில், தேவிகா ராதாகிருஷ்ணன், அகிலாண்டேஸ்வரி ஆகியோர், 480 மதிப்பெண்கள் பெற்று, கே.வி., முதன்மை மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அஞ்சனா என்ற மாணவி, பொருளியலில் 'சென்டம்' பெற்றுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாணவி 3ம் இடம் : சி.பி.எஸ்.இ., பிளஸ் ௨ தேர்வில், மாற்று திறனாளிகள் பிரிவில், கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளி மாணவி தர்சனா,
483 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில், மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
மாணவி தர்சனா கூறுகையில், ''எனக்கு, பிறந்ததில் இருந்த வலது கண் குறைபாடு இருந்தது. இடது கண்ணிலும், இரண்டு வயதில் கார்னியா ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு இருந்தாலும், சாதிக்க முடியும் என, என் பெற்றோர் ஊக்கம் அளித்தனர். நான், பி.காம்., படித்து, பிஸினஸ் மேனேஜ்மென்டில் சிறந்து விளங்க ஆசைப்படுகிறேன்,'' என்றார்.