அரசு உதவி கல்லூரிகளில் விதியை மீறி 'அட்மிஷன்'
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், விதிகளை மீறி, சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு, முதலில் மாணவர்களை சேர்ப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.
கலை, அறிவியல் கல்லுாரிகளில், மே முதல் வாரத்தில் விண்ணப்ப வினியோகம் துவங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது முதல், 10 நாட்கள் வரை, விண்ணப்பம் வழங்க, அனைத்து கல்லுாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
அதேபோல், மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டும் விதிகளையும், கல்லுாரி கல்வித் துறை இயக்குனர், மஞ்சுளா வெளியிட்டார். இதில், 'அரசு உதவி பெறும் தனியார் கல்லுாரிகள், முதலில், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மட்டுமே, மாணவர்களை சேர்க்க வேண்டும். அதன்பின்னரே, சுயநிதி பாடப்பிரிவுகளில் சேர்க்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.
ஆனால், பெரும்பாலான கல்லுாரிகள், மாலை நேர படிப்பு எனப்படும், சுயநிதி பாடப்பிரிவுகளையே முதலில் நிரப்புவதாக, புகார்கள் எழுந்துள்ளன. அரசின் உதவி பெறும் பாடப்பிரிவுகளில் இடங்கள் இருக்கும் போது, சுயநிதி பிரிவில் சேர்ப்பதால், அதிக கல்வி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என, மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.