பார்வையற்ற ஆசிரியர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி.....
திருவனந்தபுரம்: மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாடங்களை கற்பிக்கும் வகையில், ஆசிரியர்களை தயார்படுத்தி வரும் கேரள அரசு, பார்வையற்ற ஆசிரியர்களுக்கும் இதற்கான பயிற்சியை அளிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள பள்ளிகளில், ஐ.டி.,@ஸ்கூல் என்ற புதிய முயற்சியின்படி, மாணவர்களுக்கு, தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
இது குறித்து, கேரள கல்வித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி, மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தரும் பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
பார்வையற்ற ஆசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, முதல்கட்டமாக, 200 ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. மேலும், 260 ஆசிரியர்களுக்கு, ஜூன் மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதன் மூலம், பார்வையற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும், தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளித்துள்ள முதல் மாநிலமாக கேரளா விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.